பெட்ரோலுக்கு ஏனப்பா பிரிட்டனில் இந்தத் தட்டுப்பாடு?


பிரிட்டன் நாட்டில் பெட்ரோலுக்குத் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மோட்டார் வாகனங்கள், மணிக்கணக்கில் பெட்ரோல் பங்குகள் முன்னால் கடந்த சில நாட்களாக காத்துக் கிடக்கின்றன. 3-ல் 2 பங்கு பெட்ரோல் நிலையங்களில் எல்லா வகை எரிபொருட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்ததால், வாகன உரிமையாளர்களுக்கிடையே சூடான வாக்குவாதங்களும் லேசான கை கலப்புகளும்கூட ஏற்பட்டன. நிலைமையைச் சமாளிக்க, எரிபொருள் லாரிகளை ஓட்டுவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற 150 ராணுவ டிரைவர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஏன் திடீரென இந்தத் தட்டுப்பாடு? பெட்ரோல் – டீசல் உற்பத்தியில் சரிவா, இறக்குமதி செய்ய பணம் இல்லையா, பெட்ரோல் விற்கும் நாடுகள் திடீரென பிரிட்டன் மீது பொருளாதாரத் தடை விதித்துவிட்டனவா? இதில் எந்தக் கேள்விக்கும் பதில் - ‘இல்லை’ என்பதுதான். உண்மையில், பெட்ரோல், கேஸ் லாரிகளை ஓட்டும் ஓட்டுநர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட பற்றாக்குறைதான் இதற்குக் காரணம். டிரைவர்கள் கிடைக்காமலா, இப்படியொரு நிலைமை? பிரிட்டனில் எல்லா டிரைவர்களும் வேலை கிடைத்து வசதியாக இருக்கிறார்களா? ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வருவதற்கு மற்றவர்கள் விரும்பவில்லையா? இவற்றுக்கும் பதில் இல்லை தான்.

குதிரையின் தேய்ந்த லாடத்தை கவனிக்காதது போல..

சிறு சிறு பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்ய அரசு உயர் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் அக்கறை காட்டாமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு இந்தத் திடீர் பெட்ரோல் பற்றாக்குறை நல்ல உதாரணம். தமிழ்நாட்டில்கூட முப்பதாண்டுகளுக்கு முன்னால், ஆங்கிலப் பாடம் கற்றுத்தரும்போது ‘ஃபார் வான்ட் ஆஃப் எ ஷூ’ என்றொரு ஆங்கிலப் பழமொழியைச் சொல்வார்கள். ராணுவத்துக்குத் தகவல் எடுத்துச் செல்லும் சிப்பாயின் குதிரைக்கு ஒரு லாடம் பழுதாக இருந்ததாம், அதைக் குதிரை லாயக்காரர் சரியாகக் கவனிக்கவில்லையாம். சிப்பாய் தகவலோடு போய்க்கொண்டிருந்தபோது குதிரையால் ஓட முடியாமல் பயணம் தடைப்பட்டதாம். அதற்குள் எதிரிகள் படையெடுத்து வந்து பெருத்த உயிர்ச்சேதமும் தோல்வியும் ஏற்பட்டதாம். ஒரு லாடம் பழுதாகியதால் மிகப் பெரிய தோல்வியே ஏற்பட்டது என்று சொல்லி, நிர்வாகத்தில் எதிலும் அலட்சியம் கூடாது என்று இளவயதிலேயே நெஞ்சில் பதிய வைப்பார்கள்.

பிரிட்டனில் கேஸ் – பெட்ரோல் போன்ற எரிபொருட்கள், ரசாயனங்கள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை ஓட்ட தனிப் பயிற்சி எடுக்க வேண்டும், அதற்கென்று சிறப்பு உரிமம் தரப்படும். அத்துடன் ஓட்டுநர்கள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அங்கு டிரைவிங் ஸ்கூல் நடத்துகிறவர்களுக்குச் சமர்த்து பத்தாது. அதனால் டிரைவர்களாக உண்மையாகவே ‘8’ போட்டு ஓட்ட வேண்டும். முதலுதவி செய்யத் தெரிய வேண்டும். பெட்டியை மட்டும் கட்டிவைத்தால் போதாது. லாரி டயர் பஞ்சர் ஆனாலோ, பிரேக் பிடிக்காவிட்டாலோ, கியர் ஜாமானாலோ, ஆயில் லீக் ஆனாலோ பழுதுபார்க்கத் தெரிய வேண்டும். கம்பெனிக்கு போன் செய்துவிட்டு சாலையோரம் டீ குடித்துக்கொண்டிருக்க அனுமதியில்லை. இத்தனை இம்சைகளோடு எழுத்துத் தேர்வும் உண்டு.

இப்போது பெருந்தொற்றுக் காலம் வேறு. உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் அளவுக்கு இங்கே வசதிகளோ, மரியாதையோ, ஊதியமோ இல்லை என்ற பிறகு யார் வருவார்கள்? இதனால் பற்றாக்குறை பெரிதாகிக்கொண்டிருந்தது.

இத்தனை சோதனைகளையும் கடந்து ஒருவர் டிரைவரானால், அவருக்குக் கிடைக்கும் ஊதியமும் படிகளும் இப்போதைய பிரிட்டனின் விலைவாசியில் கட்டுப்படியாகவில்லை. வயதான டிரைவர்கள், ஓய்வு பெறும்வரை வண்டியை ஓட்டுவோம் என்று முடிவு செய்தார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே சமயத்தில் ஓய்வு பெறும் வயதில் இருந்தனர். பிரெக்சிட் என்ற கொள்கை காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதால் பிற ஐரோப்பிய நாட்டு ஓட்டுநர்கள் பணிக்கு வருவதில் முதல் சிக்கல், எல்லைப்புற அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு உள்ளாக வேண்டும். பிறகு வேலையில் சேர்ந்தாலும் பிரிட்டனில் குடிமகனாகவோ, நிரந்தரமாகக் குடியேறவோ முடியாது. கிடைக்கும் ஊதியம் வாழ்க்கைச் செலவுகளைச் சந்திக்கவே போதாது. பிளாட்பார வாசம், கையேந்தி பவன் சாப்பாடுகூட கட்டுப்படியாகாத நிலைமை.

இப்போது பெருந்தொற்றுக் காலம் வேறு. உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் அளவுக்கு இங்கே வசதிகளோ, மரியாதையோ, ஊதியமோ இல்லை என்ற பிறகு யார் வருவார்கள்? இதனால் பற்றாக்குறை பெரிதாகிக்கொண்டிருந்தது.

ஊடகங்கள் ஆற்றிய வினை!

பிரிட்டனுக்குள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து செய்திக்கட்டுரை தருமாறு தங்களுடைய ஊடக ஆசிரியர் கொடுத்த குடைச்சலால், ஒரு நிருபர் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவரிடம் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் சும்மா இல்லாமல், பெட்ரோல் லாரிகளை ஓட்ட இப்போது டிரைவர்களுக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல் லாரிகள், உணவுப் பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் லாரிகளுக்கு ஒரு லட்சம் பேருக்கும் மேல் தேவைப்படுகிறார்கள் என்று சொல்லிவைத்தார். அந்த நிருபர் அதைப் பெரிய செய்தியாக்கினார். பிரிட்டிஷ் பெட்ரோலியமே இப்படிச் சொல்லிவிட்டதா, எடு காரை – நிரப்பு பெட்ரோல் டேங்குகளை என்று ஒரே சமயத்தில் நாடே பொங்கி எழுந்தது. விளைவு வெகு விரைவிலேயே எல்லா பெட்ரோல் பங்குகளும் வற்றத் தொடங்கின. பெட்ரோல் பங்குகளுக்கே பெட்ரோல் லாரிகளை ஓட்டக்கூட பெட்ரோல் இல்லாமல் விற்றுத் தீர்ந்தது!

அதுவரை கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்த அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் பதறியடித்து, மக்களை ஆற்றுப்படுத்த சில யோசனைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவசியம் என்றால் மட்டுமே வாகனங்களை ஓட்டுங்கள், ஓரிரு நாள் தேவைக்கு மட்டும் பெட்ரோல் அல்லது கேஸ் வாங்குங்கள். டேங்குகளை முழுதாக நிரப்பாதீர்கள், வாகனங்களிடம் செல்லாமல் போதிய தனிமனித இடைவெளி விடுங்கள் என்று.

பெட்ரோல் – கேஸ் நிரப்புவதில் சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர், ராணுவம், ஊடகம் ஆகியோருக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று – வேறு யார் - அந்தந்தத் துறையினர் கேட்க ஆரம்பித்துவிட்டனர். வியாபாரிகள், எங்களுக்கும் முன்னுரிமை தாருங்கள் நாங்கள் போய் கடைகளைத் திறந்தால்தான் இவ்வளவு கார்களில் பெட்ரோல் நிரப்பியவர்களும் ஊரைச் சுற்றி வந்தால் ஏதாவது வாங்க முடியும் என்றனர். ஆசிரியர்களும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள், “ஆன்லைன் வகுப்புக்குக்கூட நாங்கள் காரில்தான் போக வேண்டும்” என.

டிரைவர்கள் பற்றாக்குறை – பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு வரும் என்று செய்திகளை முந்தித்தந்த ஊடகத்தினர், இன்னும் எந்தெந்த தட்டுப்பாடுகள் வரும் என்று சொல்லத் தங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று கேட்கின்றனர்.

வரலாற்றில் இடம் பெற்ற அமெரிக்க பெருவீழ்ச்சி

உலக வரலாற்றில் சில விஷயங்கள் வேடிக்கையாக ஆரம்பித்து வினையாக முடிந்துவிடும். 1930-களில் அமெரிக்கப் பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருந்தபோது பங்குச் சந்தை வாசலில் வம்படித்துக்கொண்டிருந்த இருவர், இது இப்படியே நீடிக்கும் என்று நினைக்கிறீர்களா - ஒரு நாள் திடீரென பங்குச் சந்தை விழுந்துவிடும் என்று சாக்குருவி போல சொன்னார்கள். அதை அரைகுறையாக கேட்ட சிலர், இவ்விருவரும் ஒன்று நிபுணர்களாக இருக்க வேண்டும் அல்லது உள் கையாக இருக்கலாம் என்று அஞ்சி, தங்களிடமிருந்த பங்குகளை வந்த விலைக்கு விற்றுவிட்டு வீட்டுக்குப் போய் மற்றதையும் எடுத்துவருவதாகச் சொன்னார்கள். அவ்வளவுதான் இரண்டே நாளில் அமெரிக்கச் சந்தையும் விழுந்து உலகச் சந்தைகளும் படுத்தன. அமெரிக்கப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய வீழ்ச்சி இப்படித்தான் நேர்ந்தது.

பெட்ரோல் தட்டுப்பாடும் ஊடகங்களின் பிரேக்கிங் நியூஸ்களாலும் வதந்திகளாலும் ஏற்பட்டுவிட்டது. திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நிலைமை பரவாயில்லை, அவ்வளவு பதற்றமாக யாரும் வருவதில்லை என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். எப்படி வருவார்கள், ஏற்கெனவே டேங்கில் கோபுரமாக நிரப்பிவிட்டார்களே!?

இப்போது பல நிபுணர்கள் இந்த பெட்ரோல் தட்டுப்பாட்டை நீக்க பல அற்புதமான யோசனைகளைத் தொலைக்காட்சி விவாதங்களில் தெரிவித்து வருகிறார்கள். முதல் யோசனை, ஓய்வு பெற்ற டிரைவர்களை - படுத்த படுக்கையாக இருந்தாலும் - மீண்டும் பணிக்கு வருமாறு அறிவுறுத்த வேண்டும் என்பது!

வந்துட்டாங்கய்யா நிபுணர்கள்!

இப்போது பல நிபுணர்கள் இந்த பெட்ரோல் தட்டுப்பாட்டை நீக்க பல அற்புதமான யோசனைகளைத் தொலைக்காட்சி விவாதங்களில் தெரிவித்து வருகிறார்கள். முதல் யோசனை, ஓய்வு பெற்ற டிரைவர்களை - படுத்த படுக்கையாக இருந்தாலும் - மீண்டும் பணிக்கு வருமாறு அறிவுறுத்த வேண்டும், டிரைவர்களின் ஊதியம், படிகள் உயர்த்தப்பட வேண்டும். பணி நிலையைத் தரப்படுத்த வேண்டும், 8 மணி நேர வேலைக்குப் பிறகு ஓய்வு தர வேண்டும். அடுத்தது, கனரக வாகனங்களை ஓட்டும் பிற டிரைவர்களையும் பெட்ரோல், கேஸ் லாரி ஓட்ட இரண்டு நாட்களுக்குப் பயிற்சி தந்து ஓட்டச் சொல்ல வேண்டும். பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்து 150 டிரைவர்களை வரவழைத்தால் போதாது, நூற்றுக்கணக்கில் களம் இறக்க வேண்டும். டாக்டர், சுகாதாரப் பணியாளர், அரசு ஊழியர்கள், ஊடகத்தினர் போன்ற அத்தியாவசியப் பணிகளைச் செய்வோருக்கு தனித்தனியான பெட்ரோல் பங்குகளை நியமித்து அங்கே போய் தடங்கலின்றி வாங்க அனுமதிக்க வேண்டும் என்பதாகப் பல.

‘ஜனநாயகத்தின் தொட்டில் - அரசு நிர்வாகத்தின் கட்டில்’ என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழப்பட்ட பிரிட்டனா இது என்று வியப்பாக இருக்கிறது. படிப்பும் ஆராய்ச்சியும் அதிகமானாலும்கூட, அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டிய சிறிய காரியங்களில் அலட்சியம் செய்தால் ஒரு நாள் பெரிய விளைவில் அது கொண்டுபோய் விட்டுவிடும் என்பதற்கு இந்தப் பெட்ரோல் தட்டுப்பாடு நல்ல உதாரணம். நம் ஊரில் பரவாயில்லை லிட்டர் 100 ரூபாய் என்றாலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதை வரிகள் இல்லாமல் வெகுவாகக் குறைத்தால், கோவிட் ஊரடங்கு நீங்கிய மகிழ்ச்சியில் நாமும் கூர்க் தேயிலை வாங்க குடகு மலைக்கே பைக், கார்களில் பறப்போம் மக்களே! (பெட்ரோல் போடாமலே வயிறு எரியுமே!)

x