ஒரு நாட்டின் தலைவர் வெளிப்படைத் தன்மையைக் காட்டிலும் பூடகமான வழிமுறைகளையே நிர்வாகத் திறனாகக் கொண்டிருந்தால், அந்த நாடு எத்தகைய குழப்பங்களை எதிர்கொள்ளும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறது இலங்கை. அதிபர் கோத்தபய ராஜபக்சவின் சமீபத்திய நடவடிக்கைகள், இலங்கையின் எதிர்காலத்தை எந்தத் திசைவழி நோக்கி நகர்த்தப்போகின்றன எனும் கேள்வி விஸ்வரூபம் எடுக்கிறது.
முரணான பேச்சுகள்
நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் செப்டம்பர் 22-ல் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய கோத்தபய, கரோனா பாதிப்புகள், பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் எனப் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். வழக்கம்போல, விடுதலைப் புலிகளை ஒழித்ததன் மூலம் இலங்கையில் அமைதி நிலைநாட்டப்பட்டதாக மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
எனினும், 4 நாட்கள் முன்னதாக ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குத்ரேஸைச் சந்தித்தபோது அவர் பேசிய வார்த்தைகள்தான், இன்றைக்கு முக்கியமான விவாதப் பொருளாகியிருக்கின்றன. இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண, புலம்பெயர் இலங்கைத் தமிழர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் தயாராக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்குப் பொதுமன்னிப்பு அளித்து அவர்களை விடுவிக்கத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். புலம்பெயர் இலங்கைத் தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும், வெளிநாட்டு வாழ்க்கைக்காக இலங்கையில் பிரச்சினைகள் தொடர்வது போன்ற சித்திரத்தை உருவாக்குபவர்கள் என்றும் விமர்சித்துவந்த அதே கோத்தபய, ஐநா பொதுச் செயலாளரிடம் இப்படிப் பேசியது ஆச்சரியத்துக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, இலங்கையில் காணாமலடிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களைக் கோரி அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்கப் போராட்டம் நடத்திவரும் நிலையில், காணாமலடிக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழும் நஷ்ட ஈடும் வழங்குவதாக கோத்தபய அறிவித்திருக்கிறார். இறுதிப்போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான 1 லட்சம் ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக ஐநா மனித உரிமை ஆணையம் கூறியிருக்கும் தருணத்தில், கோத்தபயவின் இந்தப் பேச்சுகள் அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன.
விவாதங்கள்
கோத்தபயவின் வார்த்தைகள் குறித்து, இலங்கைக்குள்ளும் வெளியிலும் வாழும் தமிழர்கள் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கைக்குள் வாழும் தமிழர்களிடம் பேசுவதைவிட்டுவிட்டு, புலம்பெயர் தமிழர்களுடன் பேச வேண்டிய அவசியம் என்ன என்றும் ஒருசாரார் கேள்வி எழுப்புகிறார்கள். ஜூன் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்குத் திட்டமிடப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடாமல் அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இத்தனைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, ராஜபக்ச சகோதரர்கள் 2019-ல் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் உறுதிகூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அலட்சியம் காட்டியவர்
2009-ல் நடந்த இறுதிப்போரின்போது, இலங்கை பாதுகாப்புத் துறையின் செயலாளராக இருந்த கோத்தபயவிடம், போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “பொதுமக்கள் (போரில்) மரணமடைவதைத் தடுப்பதில், உலகின் எந்த ஒரு நாட்டின் ராணுவத்தையும்விட இலங்கை ராணுவம் சிறப்பாகவே செயல்பட்டது. இலங்கை ராணுவத்தைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த யாரேனும் முயற்சித்தால், அமெரிக்கப் படைகள், பிரிட்டன் படைகள் உள்ளிட்ட அனைத்து ராணுவமும் அதன் தலைவர்களும் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஐநா, மனித உரிமை அமைப்புகள் போன்றவை முதலில் அதைச் செய்யட்டும்” என்று அலட்சியமாகப் பதிலளித்தார். குறிப்பாக, மனித உரிமை அமைப்புகள் என்று சொல்லும்போது குரலில் அத்தனை கேலி தொனித்தது. அது அவரது இயல்பு. இறுதிப்போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த எந்தக் கேள்வியையும் அலட்சியச் சிரிப்புடன் தான் அவர் எதிர்கொண்டார்.
இலங்கை அதிபராக, வடக்கு மத்திய மாகாணத்தின் அனுராதபுரத்தில் உள்ள பவுத்தக் கோயில் ஒன்றில் பதவியேற்றுக்கொண்ட கோத்தபய, “சிங்கள மக்களின் ஆதரவு மட்டும் இருந்தாலே வென்றுவிடலாம் என்பது எனக்கு முன்பே தெரியும். எனினும், எனது வெற்றியில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரும் பங்கேற்க வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன். ஆனால், எனது எதிர்பார்ப்பை அவர்களது எதிர்வினை பூர்த்திசெய்யவில்லை” என்று பேசியது, இலங்கைச் சிறுபான்மையினர் விஷயத்தில் அவரது பார்வையைப் பட்டவர்த்தனமாக்கியது. தனது ஆட்சி சிங்களர்களுக்கானது என்பதை வெளிப்படையாகவே அவர் அறிவிக்கவும் செய்தார்.
இறுதிக்கட்டப் போரில் சரணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டதாகவும், சிலர் இலங்கை ராணுவத்திலேயே சேர்க்கப்பட்டதாகவும் கூறிவந்தவர், இன்றைக்குக் காணாமலடிக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழும் நஷ்ட ஈடும் வழங்குவதாகக் கூறியிருப்பது, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி ஒரே நேரத்தில் நம்பிக்கை அளிக்கும் விதத்திலும், நம்பிக்கையைக் குலைக்கும் விதத்திலும் கோத்தபய பேசியிருப்பது ஏன்?
தவறான முடிவுகளா, தந்திரமா?
கடந்த சில காலமாகப் பொருளாதார ரீதியான சிக்கல்களில் இருக்கிறது இலங்கை. கரோனா பெருந்தொற்று காரணமாக இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட முடக்கம், பொருளாதார நெருக்கடியின் முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது. இலங்கையின் ஜிடிபி-யில் 10 சதவீதமாக இருக்கும் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட சரிவு அந்நாட்டை உலுக்கிவிட்டது. இலங்கையின் பணமதிப்பும் படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.
2020 ஆகஸ்ட் மாதம் 6.93 பில்லியன் டாலராக இருந்த இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, கடந்த ஜூலை மாதம் 2.36 பில்லியன் டாலராகக் கரைந்துபோனது. வெளிநாடுகளிடம் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இலங்கை, அந்நியச் செலாவணிக் கையிருப்பிலிருந்து 1 பில்லியன் டாலரை எடுத்துக் கொடுத்துச் சமாளித்திருக்கிறது. சீனாவுக்கு மட்டும் 5 பில்லியன் டாலரைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது.
உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி மூலம் வெகுவாகச் சார்ந்திருக்கும் இலங்கை, இன்றைக்குக் கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கிறது. கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலவுவதாலும், உணவுப் பொருட்களின் பதுக்கலாலும், விலைவாசி அதிகரித்ததாலும் ராணுவத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய கோத்தபய உத்தரவிட்டிருக்கிறார். உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு விஷயத்தில் இயற்கை விவசாயம் குறித்த அவரது தவறான நம்பிக்கைதான் முக்கியக் காரணியாகியிருக்கிறது. இயற்கை விவசாயத்தைப் பெரிதும் நம்பும் கோத்தபய, இயற்கை விவசாயத்தை முழுமையாகப் பின்பற்றும் முதல் நாடாக இலங்கையைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார்.
ரசாயன உரங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தார். அவற்றை இறக்குமதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டது. இவை அனைத்தும் இலங்கையின் வேளாண் விளைச்சலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள். உண்மையில், இலங்கையின் நெற்பயிர்கள் 94 சதவீதம் ரசாயன உரங்களைச் சாந்திருப்பவை. இலங்கையின் மற்ற முக்கிய விளைபொருட்களான ரப்பர், தேயிலை ஆகியவை 89 சதவீதம் ரசாயன உரத்தைச் சார்ந்திருப்பவை. இலங்கையின் உணவு உற்பத்தியில் 80 சதவீதம், சிறு விவசாயிகளின் விளைநிலங்களிலிருந்து கிடைக்கிறது.
இப்படியான சூழலில், படிப்படியாக இயற்கை விவசாயத்தை அமல்படுத்துவதற்குப் பதிலாக அவசரகதியில் அதை அமல்படுத்தியதன் விளைவை இலங்கை அனுபவிக்கிறது. விளைச்சல் குறைவாக இருப்பதால், அதைச் சரிகட்ட அதிகமான நிலங்களில் பயிரிட வேண்டியிருக்கும்; விளைநிலங்களை விஸ்தரிக்க வேண்டும். அதற்காகக் காடுகளை அழிக்க வேண்டிய சூழல் ஏற்படும். சரியான திட்டம் இல்லாமல் இயற்கை விவசாயத்தில் இறங்கியதால், இப்படி அடுக்கடுக்கான பின்விளைவுகளை எதிர்கொண்டிருக்கிறது இலங்கை.
இதற்கிடையே, ஆகஸ்ட் 30-ல் பொருளாதார நெருக்கடி நிலையை கோத்தபய அரசு அறிவித்தபோது, ஐநா மனித உரிமை ஆணையம் அதை ரசிக்கவில்லை. ராணுவத்தின் பணிகளை இப்படி விஸ்தரிப்பது சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கீடுகளை ஏற்பட்டுத்தலாம் என்றும் கவலை தெரிவித்தது. வடகிழக்கு மாகாணங்களில்தான் அதிக அளவில் ராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள். ரேஷன் விநியோகத்தில் அவர்களைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம், இதுவரை அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்ட ராணுவத்தினர் மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுகிறார்கள் எனும் பிம்பத்தையும் உருவாக்க முடியும் எனச் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்தச் சூழலில் ஐநாவில் தனது பேச்சுக்கள் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார் கோத்தபய. இவற்றால் ஒட்டுமொத்த இலங்கைக்கும், எண்ணிலடங்காத் துயரங்களை அனுபவித்துவரும் தமிழர்களுக்கும் ஆறுதல் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!
பெட்டிச் செய்தி
ஏன் ஐநா அதைக் கேட்கவில்லை?
“பொருளாதார ரீதியாக ஏற்பட்டிருக்கும் சரிவைச் சரிகட்ட சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்பதை கோத்தபய உணர்ந்திருக்கிறார். அதனால்தான் இப்படியாகக் காய்நகர்த்துகிறார்” என்கிறார் இலங்கையைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் இரா.மயூதரன். மேலும், “இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏற்கெனவே ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. திரிகோணமலையில் 33 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அமெரிக்காவுக்கு கோத்தபய அரசு வழங்கியுள்ளதாக சிங்களத் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டை, இலங்கை அரசு இதுவரை மறுக்காதது அச்செய்தியை உறுதி செய்வதாகவே அவதானிக்கப்படுகிறது. போரின் இறுதிக் காலத்தில் இலங்கை ராணுவத்தினரிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் இறந்துவிட்டார்கள் என்றால், அவர்களுக்கு என்ன நடந்தது? இவ்வாறு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு ஒரேநேரத்தில் இயற்கை மரணம் நேர்ந்ததா? இல்லை, இல்லாமல் ஆக்கப்பட்டார்களா? அப்படியாயின் அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்த ஏன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், ஐநா-வும் வலியுறுத்தவில்லை?” என்கிறார் மயூதரன்.