அகதிகளை விரட்டியடிக்கும் அமெரிக்கா


கல் மனம் கொண்டவர்கள்கூட அந்தக் காட்சியைப் பார்க்கும்போது கலங்கிவிடுவார்கள். டெக்சாஸ் எல்லை அருகே ரியோ கிராண்டே ஆற்றைக் கடந்து அபயம் தேடி வந்திருக்கும் ஹெய்ட்டி அகதிகளை, குதிரை மீது அமர்ந்து வரும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் விரட்டுகிறார்கள். மூட்டை முடிச்சுகளுடன் குழந்தைகளைச் சுமந்தபடி வந்த கறுப்பின ஆண்களும் பெண்களும் ஆற்றுக்குள் இறங்கி சிதறி ஓடுகிறார்கள். செப்டம்பர் அமெரிக்காவின் சமகால வரலாற்றின் கறுப்புப் பக்கமாகப் பதிவாகிவிட்டது, அந்தக் காட்சி.

அத்துடன் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை குறித்த கண்டனங்களும் எழுந்திருக்கின்றன. முந்தைய அரசுக்கும் இப்போதைய அரசுக்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் ஹெய்ட்டி சமூகச் செயற்பாட்டாளர்கள்.

பைடன் அரசின் இரட்டைத் தன்மை

இந்த அக்கிரமத்தைக் கண்டித்து, ஹெய்ட்டிக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் டேனியல் ஃபோட் தனது பதவியை உதறியிருக்கிறார். சொந்த மக்களைப் பாதுகாக்க முடியாத, அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத நிலையில் ஹெய்ட்டி இருக்கும்போது, அவர்களைத் திருப்பி அனுப்புவது கொடுமையானது என்று அவர் வருத்தத்துடன் கூறியிருக்கிறார். வெள்ளையினத்தைச் சேர்ந்த டேனியல் எடுத்திருக்கும் துணிச்சலான முடிவு, குடியேறிகளைக் கையாள்வதில் பைடன் அரசு கொண்டிருக்கும் இரட்டைத்தன்மை கொண்ட நிலைப்பாட்டை மேலும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.

கதவை மூடிக்கொண்ட அமெரிக்கா

மத்திய அமெரிக்க நாடுகள், கரீபியன் நாடுகள் என அண்டை நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான அகதிகள், அமெரிக்காவை நோக்கிக் குடும்பத்துடன் புகலிடம் தேடிச் செல்கின்றனர். வன்முறை, வறுமை, பருவநிலை மாற்றத்தின் கொடூர விளைவுகள் எனப் பல்வேறு காரணிகள் அவர்களைத் தங்கள் சொந்த நாட்டைவிட்டு, உயிரச்சத்துடன் ஓடவைக்கின்றன.

எப்படியாவது அமெரிக்கா தங்களுக்கு அபயம் அளிக்கும் எனும் நம்பிக்கையில், தெற்கு டெக்சாஸில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் ஹெய்ட்டி மக்கள் உட்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில், அவர்களில் பலர் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருபுறம் ஆப்கன் அகதிகளை வரவேற்கும் அமெரிக்கா, மறுபுறம் ஹெய்ட்டி மக்களை அடித்து விரட்டுவது ஏன் என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

வெளியுறவுக் கொள்கையிலும், அகதிகள், குடியேறிகள் விஷயத்திலும் இதுவரை ட்ரம்ப் மீதுதான் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. பெருந்தொற்று பேரழிவுகளை ஏற்படுத்திய காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு ‘டைட்டில் 42’ எனும் பெயரில், அகதிகளுக்கான கதவுகளை இறுக மூடிக்கொண்டது அமெரிக்கா.

ஆனால், குடியேறிகள் விஷயத்தில் ஆக்கபூர்வ மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக, அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது நம்பிக்கையை உருவாக்கியிருந்தார் பைடன். இன்றைக்கு அவரே அந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டார்.

மவுனம் கலைத்த பைடன்

இவ்விஷயத்தில் பைடன் எந்தக் கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்துவருவதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், வாய் திறந்த பைடன், “இது ஒரு தலைகுனிவு. சொல்லப்போனால் அதையும் தாண்டி ஆபத்தானது. தவறானது. இது உலகத்துக்குத் தவறான செய்தியைச் சொல்கிறது. இப்படியானவர்கள் அல்ல நாங்கள்” என்று கூறியிருக்கிறார். ஆனால், பைடன் அரசின் குடியேற்றக் கொள்கைகளில் இருக்கும் குழப்பங்களும், சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவல்களும் இணைந்தே ஹெய்ட்டி மக்களைப் பரிதவிக்க விட்டுவிட்டன.

இப்போதைக்கு, 12,400 பேர் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் தற்காலிகமாகத்தான். புகலிட சட்டங்களின்படி தங்கவைக்கப்பட்டிருக்கும் அவர்கள், குடியேற்ற நீதிபதி முன் விசாரிக்கப்படுவார்கள். இன்றைய சூழலில் அவர்கள் ஹெய்ட்டிக்குத் திருப்பி அனுப்பப்படவே வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. அங்கே ஒரு பேரிருள் காத்திருக்கிறது என்பதுதான் வேதனை.

x