ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கு நாளை தேர்தல்


ஏஞ்சலா மெர்க்கல்

ஜெர்மனி நாட்டின் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நாளை (செப்.26) காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 16 ஆண்டுகள் தொடர்ந்து அதிபராகப் பதவி வகித்த ஏஞ்செலா மெர்க்கலுக்குப் பிறகு யார் அந்தப் பதவியை அலங்கரிப்பார் என்ற கேள்வி அனைவர் மனங்களிலும் எழுந்துள்ளது.

இந்தத் தேர்தலில் 18 வயதுக்கு மேற்பட்ட 6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 598 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் இரண்டு வாக்குகள் அளிப்பார்கள். ஜெர்மனியின் 299 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களுக்கு முதல் வாக்கும், விரும்பும் அரசியல் கட்சிக்கு இரண்டாவது வாக்கு செலுத்தப்படும். முதல் வாக்குப்படி, தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வென்றவராக அறிவிக்கப்படுவார். இரண்டாவது வாக்கு அரசியல் கட்சிகளுக்கானது. இது விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையாகும். ஒரு கட்சி சார்பில் நேரடியாக வென்ற தொகுதிகளுக்கும் அது வாங்கிய வாக்குகள் சதவீதத்துக்கும் பொருத்தம் இல்லாமல் போனால், கூடுதலான தொகுதிகள் உருவாக்கப்பட்டு அக்கட்சிக்கு வழங்கப்படும்.

மாலை 6 மணிக்கு மேல் வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளியாகும். வாக்கு எண்ணிக்கை இரவே தொடங்கிவிடும்.

யாருக்கு வெற்றிவாய்ப்பு?

கருத்துக் கணிப்பு முடிவுகள்படி பார்த்தால் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை வலு கிடைக்காது என்பது புலனாகிறது. மையவாத இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயகக் கட்சிக்கு 26 சதவீத மக்களும், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (சிடியு) மற்றும் அதன் பவேரியா மாநில சகோதர கட்சி கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (சிஎஸ்யு) கட்சிக்கு 25 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தத் தேர்தலில், தங்களுடைய வாக்கு யாருக்கு என்று தெரிவிக்காதவர்களும், தபால் மூலம் வாக்களிப்போரும்தான் முடிவைத் தீர்மானிப்பார்கள் என்று தெரிகிறது.

ஏஞ்செலாவுக்கு இணையான அரசியல் செல்வாக்குள்ள தலைவர் களத்தில் இல்லை. எனவே ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு கட்சி அல்லது கூட்டணி முன்னிலை வகித்ததாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. பருவநிலை மாறுதல்தான் இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்சினையானது. பெர்லினில் நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு எதிரில் வெள்ளிக்கிழமை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடி, பருவநிலை மாறுதலைத் தடுக்க போதிய நடவடிக்கையை யாரும் எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர். பருவநிலை மாற்றச் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் அக்கூட்டத்தில் பேசினார்.

சமூகநலத் திட்டங்களுக்கு அரசு செய்யும் செலவு, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம், ஜெர்மனியின் டிஜிட்டல் கட்டமைப்பை மேலும் சீர்படுத்த வேண்டியதன் அவசியம், நேட்டோ கூட்டணியில் ஜெர்மனியின் பங்கு ஆகியவற்றுக்கும் தேர்தலில் முக்கியத்துவம் தரப்பட்டது. அதேவேளையில் கட்சித் தலைவர்களின் ஆளுமைக்கும் இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் முக்கியத்துவம் தந்தனர். நிதியமைச்சர் ஓலாஃப் ஷோல்ட்ஸ் அதிபர் பதவிக்குத் தகுதியானவர் என்று 47 சதவீதம் பேர் கூறியிருந்தனர்.

பெர்லின், மெக்லென்பர்க் - வோர்போமெர்ன் மாநிலங்களுக்கும் பொதுத் தேர்தல் சேர்த்தே நடைபெறுகிறது. கோவிட் பெருந்தொற்றால் வாக்குப்பதிவு குறையாது என்று தெரிகிறது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கட்சிகள் தங்களுக்குள் கலந்துபேசி கூட்டணி அரசைத்தான் அமைக்கும். அதற்குச் சில வாரங்கள், மாதங்கள்கூட பிடிக்கலாம்.

x