கிரிப்டோ கரன்சிக்கு சீன அரசு தடை!


பிட்காயின், டெதர் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சியை இனி சீன நாட்டு சந்தைகளிலும் சீன நிறுவனங்கள், முதலீட்டாளர்களுடனான பரிமாற்றங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்று சீன மக்கள் வங்கி கிரிப்டோ கரன்சி பயன்பாட்டுக்கு இன்று தடைவிதித்துள்ளது.

சீனாவில் வசிப்போருடன் வெளிநாட்டிலிருப்போர் இவற்றின் மூலம் மேற்கொள்ளும் அனைத்துப் பரிமாற்றங்களும் சட்டவிரோதமானவை என்றும் அது எச்சரித்திருக்கிறது. இதையடுத்து சந்தையில் பிட்காயினின் மதிப்பு 5.5 சதவீதம் சரிந்தது. சீனாதான் கிரிப்டோ கரன்சி உருவாக்கத்தில் முதன்மை நாடாக இருந்துவந்தது. ஆனால், தற்போது திடீரென்று சீனா கிரிப்டோ கரன்சிக்கு தடைவிதித்திருப்பது உலக நாடுகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எந்த அரசுக்கும் கிரிப்டோ கரன்சி கட்டுப்பட்டதல்ல என்பதால் இதற்குச் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது...

சீனாவின் முதன்மை ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட் குழுமம் கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் தற்போதைய சூழலில், சீன அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிப்டோ கரன்சிகளை வெளியிடுவது யார், வைத்திருப்பது யார் என்பது அரசுகளால் கண்டுபிடிக்க முடியாது. அவற்றில் முதலீடு செய்பவர்கள், அவர்களுடைய முகவர்களால் மட்டுமே அவை கையாளப்படுகின்றன. இந்தியா உள்பட பல நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு இந்த கிரிப்டோ கரன்சிகள் தலைவலியாகத்தான் இருக்கின்றன.

டாலர்கள் உள்ளிட்ட செலாவணிகளைப் பயன்படுத்தச் செலுத்த வேண்டிய தரகுக் கட்டணத்தைவிட இதில் தரகு குறைவு என்பதாலும், எந்த அரசுக்கும் இது கட்டுப்பட்டதல்ல என்பதாலும் கிரிப்டோ கரன்சிக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 40,000 அமெரிக்க டாலர்கள் என்கிறார்கள்.

பிட்காயின் என்பது சடோஷி நகமோட்டோ என்பவரால் 2009-ல் உருவாக்கப்பட்ட கணினிவழி டிஜிட்டல் நாணயமாகும். பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இது செயல்படுகிறது. ஆன்லைனில் பொருள்களை வாங்கவும் சேவைகளைப் பெறவும் பிட்காயின்களைப் பயன்படுத்தலாம்.

ஏற்கனவே இந்தியாவும் கிரிப்டோ கரன்சிக்கு தடைவிதித்து இருந்தது. ஆனால், கிரிப்டோ கரன்சி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள நிலையில் அதற்கான தடையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீக்கியது. எனினும், கிரிப்டோ கரன்சியை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு இந்திய அரசு அனுமதிக்கவில்லை.

இதுவரையில் ஒரே ஒரு நாடுதான் கிரிப்டோ கரன்சியை அதன் அதிகாரப்பூர்வமான பரிவர்த்தனைக்கு அனுமதியளித்திருக்கிறது. அது எல் சல்வதார். இரு வாரங்களுக்கு முன்பு எல் சல்வதார் அரசு, பிட்காயினுக்கு அனுமதி வழங்கியதோடு மட்டுமல்லாமல், அதிகாரப்பூர்வமான பரிவர்த்தனைக்கும் அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.

x