மரண தண்டனை, கைகளை வெட்டுவது தொடரும்: தாலிபான்கள் அறிவிப்பு


தாலிபான்களின் ஆட்சி ஏற்பட்டிருப்பதால் மதச் சட்டப்படி குற்றவாளிகளைத் தூக்கில் போடுவது, திருடுவோரின் கைகளை வெட்டுவது, கள்ள உறவு கொண்டால்; பாலியல் தொழிலில் ஈடுபட்டால்; திருமணத்துக்கு முன்பாகவே உடலுறவுக் கொண்டால் கல்லால் அடித்துக் கொல்வது, சித்திரவதை செய்து சாகடிப்பது ஆகியவை மீண்டும் அமலுக்கு வருகிறது என்று சிறைத் துறைகளுக்குப் பொறுப்பான முல்லா நூருதீன் துராபி கூறுகிறார்.

சமுதாயப் பாதுகாப்புக்காகவும் குற்றங்களைத் தடுப்பதற்காகவும் இந்தத் தண்டனைகள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

”1990-களில் இப்படிப்பட்ட குற்றங்களுக்கான தண்டனைகளை விளையாட்டு மைதானங்களிலும் ஈத் பெருவிழாவுக்கான திடல்களிலும் பலரும் பார்த்திருக்க நிறைவேற்றினார்கள். இதைத்தான் சர்வதேச சமூகம் பார்த்துவிட்டு ஆட்சேபிக்கிறது. இதற்குப் பதிலாக யாரும் பார்க்காத இடத்தில் நிறைவேற்றிவிடலாமா, பலரும் பார்க்கும்படியாக நிறைவேற்றலாமா என்று ஆலோசித்து வருகிறோம். எப்படியாக இருந்தாலும் தண்டனைகள் நிறைவேற்றப்படுவது நிச்சயம்” என்றார் நூருதீன் துராபி.

”இதற்குக் கண்டனங்கள் தெரிவித்தாலும் நிறுத்தமாட்டோம், மற்றவர்களுடைய சட்டங்களைப் பற்றி நாங்கள் ஏதாவது ஆட்சேபிக்கிறோமா?” என்று அவர் கேட்டார்.

முன்பு ஆட்சி செய்தபோது இருந்தபடி கடுமையாக நடந்துகொள்ள மாட்டோம் என்று கூறினாலும் தங்களுடைய வழிமுறைகளை தாலிபான்கள் கைவிடவில்லை என்பதை அடுத்தடுத்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன.

ஹேரட் நகரில் அனைவருக்கும் நன்கு தெரிந்த பிரபலமான சில பெண்களை அவர்களுடைய வீடுகளுக்கே சென்று தேடியிருக்கிறார்கள் தாலிபான்கள். மதச் சட்டத்தை மீறி பொதுவெளியில் செயல்பட்ட அவர்களுக்குத் தண்டனை நிச்சயம் என்று தெரிந்தவர்கள் அஞ்சுகிறார்கள். பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்குவது, துடிக்கத் துடிக்க சித்திரவதை செய்து கொல்வது ஆகிய செயல்களைத் தலிபான்கள் மீண்டும் தொடங்கிவிட்டார்கள் என்று ஆம்னஸ்டி அமைப்பின் தலைமைச் செயலாளர் ஆக்னஸ் கல்லாமார்ட் அஞ்சுகிறார்.

தாலிபான் நீதிபதி ஆதரவு

”இஸ்லாமிய மதச் சட்டங்கள் கூறுகிறபடி கடுமையான தண்டனைகளை நிறைவேற்றுவதை நான் வரவேற்கிறேன்” என்று பால்க் பகுதியைச் சேர்ந்த ஹாஜி பத்ருதீன் என்ற தாலிபான் நீதிபதி, பிபிசி நிருபர் சிக்கந்தர் கெர்மானியிடம் கூறியிருக்கிறார்.

தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன்களைப் பயன்படுத்துவது, போட்டோக்கள், விடியோக்கள் எடுப்பது ஆகியவை அனுமதிக்கப்படும்...

திருமணத்துக்கு முன்னால் பெண்ணோ, ஆணோ உடலுறவு கொண்டால் 100 முறை சாட்டையால் அடிக்க வேண்டும் என்கிறது மதச் சட்டம். அதே திருமணமானவர்கள் வேறு ஆண் அல்லது பெண்ணுடன் உறவு கொண்டால் அவர்களைக் கல்லால் அடித்தே கொல்ல வேண்டும், திருடினால் - திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டால் - திருடிய கையை வெட்ட வேண்டும் என்று தண்டனைகளை அவர் நினைவுபடுத்தினார். இந்தத் தண்டனைகள் சரியானவைதான் என்று தாலிபான் அல்லாத, அதே சமயம் மத நம்பிக்கை மிகுந்த பழமைவாதிகளும் ஆதரிக்கின்றனர்.

மத நம்பிக்கைகளுக்குத் தொடர்பில்லாத இசையைக் கேட்டாலோ, தாடியை மழித்தாலோ கடுமையான தண்டனைகளை 1990-களில் விதித்த முல்லா நூருதீன் துராபி, அவை மீண்டும் தொடரும் என்றார். அதே சமயம் தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன்களைப் பயன்படுத்துவது, போட்டோக்கள், விடியோக்கள் எடுப்பது ஆகியவை அனுமதிக்கப்படும் என்றார்.

துராபியுடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது, அவரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை முன்னர் தடை விதித்தது. ஆனால், அவர் கைது செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டார். இப்போது மீண்டும் முக்கிய இடத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்.

x