பாகிஸ்தான் எல்லையில் காத்திருந்து ஆப்கன் அகதிகள் மடிந்துபோகும் அவலம்!


ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் செல்ல முயலும் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் குடும்பங்களை, உள்ளேவிட பாகிஸ்தான் ராணுவமும் எல்லைக் காவல்படையும் மறுக்கின்றன.

பட்டினி, நீர்ச்சத்து இல்லாத உடல் வறட்சி, பல மைல் தூரம் நடந்து வந்ததால் ஏற்பட்ட உடல் அசதி, மன வேதனை, எதிர்காலம் பற்றிய அச்சம் ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று குடும்பம் குடும்பமாகக் காத்திருக்கின்றனர்.

காந்தஹார் மாநிலத்தின் ஸ்பின் போல்டாக் என்ற எல்லையோர நகரில் ஆப்கானியர்கள் தொடர்ந்து குவிகின்றனர். இந்த ஊருக்கு அருகில்தான் பாகிஸ்தானின் சமன், குவெட்டா ஆகிய நகரங்கள் இருக்கின்றன.

இதுவரை பாகிஸ்தான் அரசிடம் பதிவு பெற்று 14 லட்சம் ஆப்கானியர்கள் தங்கியுள்ளனர். அரசிடம் பதிவு செய்துகொள்ளாமல் வந்து குவிந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்துக்கும் மேல்.

தங்களுடைய உறவினர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும், ஏற்கெனவே பாகிஸ்தானுக்குத் தப்பிச்சென்றுவிட்ட உறவினர்களுடன் சேர்ந்துகொள்ளவும், தாலிபான்களிடம் சிக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலும் எல்லைப்புற ஊருக்குச் செல்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்ததிலிருந்து தாலிபான்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பாகிஸ்தான், ஆப்கானிய அகதிகள் வர அனுமதித்து வந்தது. இதுவரை பாகிஸ்தான் அரசிடம் பதிவு பெற்று 14 லட்சம் ஆப்கானியர்கள் தங்கியுள்ளனர்.

அரசிடம் பதிவு செய்துகொள்ளாமல் வந்து குவிந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்துக்கும் மேல். இப்போது தாலிபான்கள் தங்களை ஆதரிக்காதவர்களையும் அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களையும் தேடிக் கண்டுபிடித்துப் பழிவாங்க முற்படுவதாலும், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டதாலும் வறட்சியாலும் வேலையின்மையாலும் பட்டினி கிடக்க நேர்வதாலும் உயிர் பிழைக்க பாகிஸ்தானுக்குள் நுழையப் பார்க்கின்றனர்.

இப்போது சிகிச்சைக்காகவோ, உறவினர்களுடன் சேர்வதற்காகவோ வருகிறவர்களைக்கூட அனுமதிப்பதில்லை.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுதாகக் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டுடனான எல்லைக் கதவுகளை மூடிவிட்டது பாகிஸ்தான். புகலிடம் தேடி வருகிறவர்களைத் திருப்பி அனுப்புகிறது. சிகிச்சைக்காகவோ, உறவினர்களுடன் சேர்வதற்காகவோ வருகிறவர்களைக்கூட அனுமதிப்பதில்லை.

ஏற்கெனவே ஆப்கானிய அகதிகள் எண்ணிக்கை அதிகமிருப்பதால், மேலும் பலர் வந்தால் பாகிஸ்தான் தாங்காது என்றும் அடிப்படை வசதிகளைச் செய்துதர முடியாது என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். வெயில் தாளாமலும் குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காததால் ஏற்பட்ட உடல் வறட்சியாலும் பலர் இறந்து கொண்டிருப்பதாக ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ஆப்கானியர்கள் தெரிவிக்கின்றனர். சமன் என்ற இடத்தில் எல்லைப்புற கதவை பாகிஸ்தான் அதிகாரிகள் பலவந்தமாக மூடியபோது, எதிர்புறத்தில் நின்ற ஆப்கானியர்கள் நெரிசலில் சிக்கினர். அதில் பலர் காயம் அடைந்தனர், ஒருவர் அந்த இடத்திலேயே மிதிபட்டு இறந்தார்.

காத்திருந்து...காத்திருந்து...

அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக எல்லைப்புறக் கதவுகள் மூடப்பட்டதால், காய்கறி, இறைச்சி, இதர நுகர்வுப் பண்டங்கள் ஏற்றிய லாரிகள் பல மைல் தொலைவுக்கு நாள் கணக்காக வரிசையில் காத்துக்கிடக்கின்றன. காய்கறி, பழங்கள், மீன், வெட்டப்பட்ட இறைச்சி ஆகியவை அழுகத் தொடங்கிவிட்டன. மசால்கேட் என்ற பகுதியில் கட்டுக்காவல் குறைவாக இருக்கும், அந்தப் பக்கமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துவிடலாம் என்று புதன்கிழமை பிற்பகல் வந்தவர்களும் முரட்டுத்தனமாகத் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அப்போது 2 ஆப்கானியர்கள் அங்கேயே இறந்தனர். அடையாள அட்டையைச் சரிபார்த்து, அவசியமானவர்களை அனுமதிப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். ஒருவரைக்கூட பாகிஸ்தான் அனுமதிப்பதில்லை என்று எல்லையில் காத்திருக்கும் ஆப்கானியர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைக்குப் போய்விடலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் மீண்டும் எல்லைகளுக்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். பல நாட்களாகச் சாப்பிடாமல் பட்டினியால் இருக்கும் அவர்களால் உரத்த குரல் எழுப்பக்கூட முடியவில்லை.

தாலிபான்கள் குற்றச்சாட்டு

‘எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு எதிராக பாகிஸ்தான் செயல்படுகிறது’ என்று தாலிபான்களே குற்றம்சாட்டுகின்றனர். காந்தஹார் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டையைக் காட்டினால் அவர்களை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க வேண்டும், அவர்கள் குவெட்டா, சமன் பகுதிக்குச் சென்றுவிட்டு தங்களுடைய வேலைகள் முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் திரும்பிவிடுவார்கள் என்பது முந்தைய ஒப்பந்தம். பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இதை மீறுகின்றனர் என்று முகம்மது சாதிக் சபேரி என்ற ஆப்கான் அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் இந்தப் போக்கால் ஆப்கானியர்கள் மனம் குமுறுகின்றனர். வெகு விரைவில் இது, பெரிய மனிதாபிமானப் பிரச்சினையாகப் போகிறது என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

x