கரோனா காய்ச்சல் ஏற்பட்டு குணமடைந்தவர்கள், முடிதிருத்தும் கடையில் ஹேர்-டை அடித்துக் கொண்ட உடனேயே தோலில் சிறு கொப்புளங்கள், கட்டிகள், அரிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இந்தப் புதிய பக்க விளைவை, கரோனா தாக்கியவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள், இதை ஆராய்ச்சி செய்யத் தொடங்கியுள்ளனர். கரோனா காய்ச்சல் வந்தவுடன் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஏற்படுத்தும் விளைவா, அல்லது நோய்க்கிருமிகள் உடலிலேயே தங்கி இதை ஏற்படுத்துகின்றனவா என்றும் ஆராய்ச்சி நடக்கிறது.
சிகை திருத்துநர்கள், அழகுக் கலை நிபுணர்கள் உள்ளிட்டோர் தங்களிடம் வரும் வாடிக்கையாளரிடம் உடல் நலம் பற்றி விசாரிப்பதும், கரோனா காய்ச்சல் வந்ததா, மருந்து சாப்பிட்டார்களா, பக்க விளைவுகள் இருந்ததா, தடுப்பூசி போட்டவர்களா என்பதையெல்லாம் கேட்டுவிட்டு பிறகே சேவையைத் தொடங்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். இல்லாவிட்டால் ஹேர்-டையால்தான் அலர்ஜி ஏற்பட்டது என்று வழக்குத் தொடுப்பார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர், தலை முடிக்குச் சாயம் பூசச் சொன்னார். வழக்கமாக ஆண்டுக்கணக்கில் அவர் பயன்படுத்தும் பிராண்டையே கடை ஊழியரும் பயன்படுத்தினார். சிறிது நேரத்துக்கெல்லாம் அவருக்கு காதுக்கு அருகில் லேசாக அரிப்பும் எரிச்சலும் ஏற்பட்டது. கடைக்காரர் பார்த்தபோது சிவந்த கொப்புளம் அல்லது கட்டி எழும்பியிருந்தது. இதைப்போல தன்னிடம் வந்த பல வாடிக்கையாளர்களில் 4 பேருக்கு நடந்தது என்று அவர் சொன்னார். அவர்கள் அனைவரும் காய்ச்சல் கண்டவர்களா என்று தெரியவில்லை. காய்ச்சலுக்குப் பிறகு உடலில் ஏற்படும் நோயெதிர்ப்பு ஆற்றல் மாறுதல்கள்தான் இதற்குக் காரணம் என்று ஊகிக்கிறார்கள். எனவே, பேட்ச்-டெஸ்ட் எனப்படும் அரிப்பு சோதனையைச் செய்த பிறகே சேவையைத் தொடருங்கள் என்கின்றனர்.