ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தாலிபான்கள் பெண்களின் சுதந்திரத்தை ஒடுக்குவதில் மட்டுமல்லாமல், பழிவாங்குவதிலும் தீவிரமாக உள்ளனர். இதனால் வாலிபால் விளையாடிய தேசிய, மாநில அணி வீராங்கனைகள் கொலை மற்றும் சித்திரவதைகளுக்கு அஞ்சி, சொந்த வீடுகளுக்குக் கூடச் செல்லாமல் எங்கெங்கோ தலைமறைவாக வாழ்கிறார்கள்.
தேசிய அணியில் இடம்பெற்ற இரு மகளிர் இது தொடர்பாகத் தெரிவிக்கும் தகவல்கள் நெஞ்சை உறைய வைக்கின்றன. அவர்களில் ஒருவரான ஜாரா ஃபயாஸி 2 மாதங்களாக வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, கடைசியில் லண்டன் போய் புகலிடம் தேடிக்கொண்டார். சோபியா என்ற புனைப்பெயரைக் கொண்ட இன்னொருவர், 2 ஆண்டுகளுக்கு முன்பாக தாலிபான்களால் கத்தியால் குத்தப்பட்டவர்.
தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் என்று தெரிந்ததும் பக்கத்து நாடு ஒன்றுக்குச் சென்று, அங்கிருந்து லண்டனை அடைந்துள்ளார். சர்வதேச வாலிபால் கூட்டமைப்பும் சர்வதேச ஒலிம்பிக் குழுவும் முயன்று எப்படியாவது மகளிர் வாலிபால் அணியின் பிற உறுப்பினர்களைப் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்குக் கூட்டிவர வேண்டும் என்று ஜாராவும் சோபியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேசிய அணியில் விளையாடிய ஒரு பெண்ணை தாலிபான்கள் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்...”வாலிபால் விளையாடிய பெண்ணை ஒப்படைத்துவிட்டால் நீங்கள் உயிரோடு இருக்கலாம், இல்லாவிட்டால் நீங்கள் சித்திரவதைப்பட வேண்டும்” என்று அச்சுறுத்துகிறார்கள்.
வாலிபால் போட்டிகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பிரபலமாயிற்று. பெண்கள் அதில் மிகவும் திறமையோடும் உற்சாகமாகவும் விளையாடினார்கள். இதனால் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாநிலங்களில் அணிகள் உருவாயின.
இப்போது தேசிய அணி மற்றும் மாநில அணி வீராங்கனைகள் தாலிபான்களிடம் சிக்கிவிடாமல் இருக்க, தங்களுடைய தோற்றங்களையே மாற்றிக்கொண்டு வெவ்வேறு மாநிலங்களில் மறைந்து வாழ்கின்றனர். வாய்ப்பு கிடைத்தால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல நினைக்கின்றனர். தங்களுடைய பெண் வாலிபால் விளையாடினாள் என்று தெரியாமலிருக்க வீட்டிலிருந்த பந்து, அவர்கள் வாங்கிய பதக்கம், சான்றிதழ் என்று அனைத்தையும் பெற்றோர்கள் எரித்துவிட்டனர்.
விளையாட்டு உடைகள், காலணிகளும் விட்டுவைக்கப்படவில்லை. புகைப்படங்கள் இருந்தால் அவையும் மறைக்கப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. அப்படியும் தேசிய அணியில் விளையாடிய ஒரு பெண்ணை தாலிபான்கள் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். பெண்கள் எந்த விளையாட்டும் விளையாடக் கூடாது என்று மதச் சட்டம் கூறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண்கள் விளையாடியதை குடும்பத்தவர் மறைத்தாலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களில் பலர் தாலிபான் இயக்கத்தில் சேர்ந்திருப்பதால் அவர்கள்தான் இதை அம்பலப்படுத்தத் துடிக்கின்றனர். குடும்பத்தாரை தினம் தினம் வந்து எச்சரிக்கின்றனர். ”வாலிபால் விளையாடிய பெண்ணை ஒப்படைத்துவிட்டால் நீங்கள் உயிரோடு இருக்கலாம், இல்லாவிட்டால் நீங்கள் சித்திரவதைப்பட வேண்டும்” என்று அச்சுறுத்துகிறார்கள்.
கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் ஜூனியர் தேசிய கால்பந்து அணிப் பெண்கள், சில நாட்கள் ஆப்கானிஸ்தானிலேயே தலைமறைவாக இருந்துவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டனர். தேசிய கிரிக்கெட் அணி மகளிர் இந்த மாத தொடக்கத்தில் இதேபோல தலைமறைவாகிவிட்டனர்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் இதுபற்றிக் கேட்டபோது, தங்களால் இயன்றவரை விளையாட்டு வீராங்கனைகளைக் காப்பாற்ற நடவடிக்கைகளை எடுப்பதாகவும் இப்போதைக்கு அதுபற்றித் தெரிவித்தால் அவர்களுடைய உயிர்களுக்கும் குடும்பத்துக்கும் ஆபத்தாகிவிடும் என்பதால் விவரங்களைத் தர முடியாது என்றும் பதில் அளித்தனர்.