ராணுவம் திடீர் தாக்குதல்: மியான்மரிலிருந்து 8,000 பேர் தப்பியோட்டம்


மியான்மர் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலால், உயிருக்கு அஞ்சி 8,000 பேர் தாங்கள் வசித்த நகரைவிட்டே ஓடிவிட்டனர். அவர்களில் கணிசமானவர்கள் இந்தியாவின் மிசோரம் மாநிலத்துக்குள் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

சின் மாநிலத்தின் தண்ட்லாங் நகரின் மீது மியான்மர் ராணுவம் திடீரென பீரங்கிகளால் சுட்டது. 20-க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. தீயை அணைக்க முயன்ற கிறிஸ்தவப் போதகரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.எத்தனை பேர் இறந்தனர் என்று தெரியவில்லை. வியாழக்கிழமை காலை இத்தகவல் வெளியே தெரியவந்தது.

மியான்மர் அரசில் வேலை பார்க்கிறவர்களைத் தவிர மற்ற குடிமக்கள் அனைவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர் என்று ஒருவர் தெரிவித்தார். அரசு ஊழியர்கள் மட்டுமே அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் சேராமல் இருக்கின்றனர். மியான்மரிலிருந்து மிசோரம் மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டங்களுக்கு கடந்த வாரத்தில் மட்டும் 5,500 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

மியான்மரில் ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெனரல் மின் ஆங் லியாங் தன்னையே பிரதமராகக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்துக்கொண்டார். நாட்டில் இப்போது அமலில் இருக்கும் நெருக்கடி நிலை மேலும் சில காலங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றார். ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி நடத்துகின்றனர். ராணுவத்தின் அடக்குமுறைக்கு இதுவரை 1,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர், 6,000-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அகதிகளாகத் தப்பி ஓடியவர்களின் முழு எண்ணிக்கைத் தெரியவில்லை.

x