கலிபோர்னியா துறைமுகத்தில் 73 கப்பல்கள் தேக்கம்


அமெரிக்காவில் நுகர்வுப் பொருட்களுக்கும் நிறுவனங்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கரோனா பெருந்தொற்றுக் காரணமாகக் கப்பல் போக்குவரத்தில் பல மாதங்களாக ஏற்பட்ட முடக்கம் முழுதாக நீங்கவில்லை. தேவையான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்செலீஸ், லாங் பீச் துறைமுகங்களுக்கு வெளியே 65 சரக்குக் கப்பல்கள் நங்கூரமிட்டு காத்துக்கிடக்கின்றன.

அமெரிக்காவில் இப்போது குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், மரச் சாமான்கள், புதிய ஆடைகள், வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவு ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது.

அமெரிக்காவுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் சரக்குகளில் 70% சதவீதம் கடல்வழியாகத்தான் வருகின்றன. அமெரிக்காவுக்கு வரும் சரக்குகளில் 40% சதவீதம் கலிபோர்னியத் துறைமுகங்களில்தான் வந்து இறங்குகின்றன. கரோனா பெருந்தொற்றுக்கு முன்னால் ஒரு சரக்கு கப்பல் வெளியே காத்திருந்தாலே அதிசயம். அந்த அளவுக்கு வேகமாகச் சரக்குகள் இறக்கப்பட்டு கப்பல்கள் திருப்பி அனுப்பப்படும்.

உலகம் முழுவதுமே ஊரடங்குகள் விலக்கப்பட்டு உற்பத்தி, விநியோகம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டதால் அமெரிக்க வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் ஆர்டர்களை நிறைய அளிக்கத் தொடங்கிவிட்டனர். ஒரே நேரத்தில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் கேட்பதால் சரக்குப் பெட்டகங்களுக்கும் சரக்குக் கப்பல்களுக்கும் கிராக்கி அதிகமாகிவிட்டது.

இதனால் வாடகையும் உயர்ந்துவிட்டது. அமெரிக்காவில் இப்போது குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், மரச் சாமான்கள், புதிய ஆடைகள், வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவு ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது. சரக்குகளுடன் கப்பல்கள் வருவது தொடர்ந்து அதிகரித்து 2022 முழுக்கத் தொடரும் என்று மதிப்பிட்டுள்ளார் லாஸ்ஏஞ்செலீஸ் துறைமுகத் தலைவர் ஜீன் செரோகா. கலிபோர்னியாவுக்கு சீனாவிலிருந்து வரும் கப்பல்கள்தான் அதிகம். கடந்த சனிக்கிழமை மட்டும் 73 கப்பல்கள் நங்கூரமிட்டு காத்துக்கிடந்தன. கப்பல்களை வேறு துறைமுகங்களுக்குத் திருப்பி அனுப்ப முடியவில்லை. அருகில் இருக்கும் ஓக்லேண்ட் துறைமுகத்தில் சரக்குகளை அதிகம் இறக்கும் வசதிகள் இல்லை.

கலிபோர்னியா பகுதியில் ஆண்டுக்கு 300 கோடி பொம்மைகள் விற்பனையாகின்றன. அவற்றில் 85% சீனாவிலிருந்துதான் இறக்குமதியாகின்றன. இப்படியே தாமதமானால் அடுத்த விடுமுறைப் பருவம் கூட முடிந்துவிடும், எங்களுடைய வியாபாரத்தில் லாபம் குறைந்துவிடும் என்று பொம்பை விற்பனை நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர் கவலைப்படுகிறார்.

ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள சாவன்னா துறைமுகமும், நாட்டின் அதிக சரக்குகளைக் கையாள்வதில் இரண்டாமிடத்தில் இருக்கும் நியூயார்க்கும் கூட வரும் சரக்குகளை இறக்கி வைக்க முடியாமல் திணறுகின்றன. எனவே, கப்பல்கள் துறைமுகங்களுக்கு வெளியே நங்கூரமிட்டு காத்துக் கிடப்பது அங்கும் தொடர்கிறது. 2022 கோடைப்பருவம் வரையில் இந்த நிலை தொடரும் என்று துறைமுகத் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.

x