சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு; ராணுவத்தின் ஒரு பிரிவினரின் முயற்சி தோல்வி


சூடான் குடிமக்கள்

சூடான் நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் இன்று (செப்.21) காலை மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ராணுவ அதிகாரிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராணுவம், மக்கள் இணைந்த கூட்டரசு

வடகிழக்கு ஆப்பிரிக்க தேசமான சூடானை நீண்ட காலம் ஆண்ட சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீர், 2019 ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அவருடைய விலகலை வலியுறுத்தி மக்கள் அதற்கும் முன்பாக நான்கு மாதங்கள் தொடர்ச்சியாகப் போராடி வந்தனர். அதற்குப் பிறகு ராணுவப் பிரதிநிதிகளும் மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்து தேசிய அரசை அமைத்தனர். சூடானியர்களிடம் நிலவும் ஆழமான அரசியல் கருத்து வேறுபாடுகளும், நெருக்கடியான பொருளாதார நிலைமையும் இடைக்கால அரசு ஏற்பட்டும்கூட நிலைமையை மாற்றிவிடவில்லை.

இந்த நிலையில், இன்று ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஈடுபட்டனர். குறிப்பாக, கவச வாகனப் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் இதில் முக்கியப் பங்கு வகித்தனர். ஆனால் ராணுவத்தின் இதர பிரிவினரும் மக்களும் அவர்களை ஆதரிக்காததால் அவர்களின் முயற்சி தோல்வியுற்றது.

இதையடுத்து, ஆட்சிக் கவிழ்ப்புக்கு மூளையாகச் செயல்பட்டது யார், ஒருங்கிணைத்தது யார் என்று விசாரிக்கப்படுகிறது. இந்த நெருக்கடிகளுக்கிடையில், தலைநகர் கார்ட்டூமில் போக்குவரத்து தொடர்ந்து செயல்பட்டது. சதிகாரர்களின் செயல்களை முறியடிக்குமாறு அரசு வானொலி, தொலைக்காட்சி ஆகியவை மக்களைக் கேட்டுக்கொண்டன.

தொடரும் சவால்கள்

சூடானின் இன்றைய கூட்டு அரசு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுவருகிறது. பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எஃப்) கடன் பெறுவதற்காக அது விதிக்கும் கடுமையான நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அரசின் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க வேண்டும், மக்களுக்கு எதையும் மானிய விலையில் விற்பனை செய்யக்கூடாது என்றது ஐஎம்எஃப். அத்துடன் அரசு வழங்கும் சேவைகளுக்கு வரி உயர்த்தப்பட்டது. விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான மானியமும் வெட்டப்பட்டது. இந்தச் சுமையை சூடானியர்களால் தாங்க முடியவில்லை. எனவே ஐஎம்எஃப் பரிந்துரைகளை எதிர்த்து நாட்டின் எல்லா பகுதிகளிலும் மக்கள் திரண்டெழுந்து கிளர்ச்சி செய்கின்றனர்.

நிலைமை தற்போது கட்டுக்குள் இருந்தாலும், நாட்டை வழிநடத்த சரியான தலைமை இல்லாததுதான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வழிவகுக்கின்றன என்று சர்வதேசப் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

x