தாலிபான்களைக் குறிவைக்கும் ஐஎஸ் கொராசான்; பலியாகும் அப்பாவி மக்கள்


மாதிரிப் படம்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்திருக்கும் தாலிபான்களுக்குத் தலைவலியாகியிருக்கின்றனர் ஐஎஸ் கொராசான் அமைப்பினர். தாலிபான்களுடன் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் ஐஎஸ் கொராசான் அமைப்பினர், அவர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.

தலைநகர் காபூலிலும், நங்கர்ஹர் மாகாணத் தலைநகர் ஜலாலாபாதிலும் சனிக்கிழமை தாலிபான்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் இதுவரை 7 பேர் மரணமடைந்திருக்கின்றனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காபூலில் தஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் காரில் குண்டு வெடித்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். ஜலாலாபாதில் நான்கு இடங்களில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. காயம் அடைந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் பலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர் தாலிபான் படையினர். இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

எனினும், ஐஎஸ் கொராசான் அமைப்பினர் நடத்திய தாக்குதல்கள் இவை என்று தாலிபான் வட்டாரங்கள் கூறியிருக்கின்றன. இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்களை அடையாளம் காணும்படி தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

x