சீனாவின் ரியல் எஸ்டேட், கடன் சந்தைகள் திணறல்


எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனம்

சீனாவின் வீடு, மனை விற்பனைத் தொழில் துறையும் கடன் வழங்கும் நிதித் துறையும் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளன. சீனாவின் முதன்மை ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்திருப்பதே இதற்கு உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

சீனப் பொருளாதார வளர்ச்சி இப்போது மந்தகதியை அடைந்திருக்கிறது. கோவிட்-19 தொடர்பான ஊரடங்குகள், பொதுப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு ஆகியவை தொழில் துறையை ஆங்காங்கே சீர்குலைத்து வருகின்றன. இந்நிலையில் சொத்துகளுக்கான விலையும் தாறுமாறாக உயர்ந்துவருகிறது. சில்லரை விற்பனை வெகுவாகச் சரிந்துவிட்டிருக்கிறது. தொழில் உற்பத்தியும் உற்சாகம் தரும் வகையில் இல்லை.

இந்தச் சூழலில், எவர்கிராண்ட் நிறுவனம் சந்தித்துவரும் நிதி நெருக்கடி பேசுபொருளாகியிருக்கிறது. ஒப்புக்கொண்ட கட்டுமானப் பணிகளைக்கூட முடிக்காமல் அந்நிறுவனம் காலதாமதம் செய்கிறது. அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதில் முதலீடு செய்த தொகையைத் திரும்ப எடுக்கப் பார்க்கிறார்கள். ரொக்கம் கைவசம் இல்லாமலும் வியாபாரம் சரிந்துவிட்டதாலும் எவர்கிராண்ட் நிறுவனம் தள்ளாடுகிறது. வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கிறது.

நிலைமை மோசமடைந்திருப்பதைத் தொடர்ந்து, தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு ரொக்கமாகத் திருப்பித் தருவதற்குப் பதிலாக, தன்னிடமுள்ள அடுக்ககங்கள், கடைகள், அலுவலகங்களுக்கான இடங்கள் ஆகியவற்றை அதிகத் தள்ளுபடியுடன் விற்க நேற்று (செப்.18) அந்நிறுவனம் முன்வந்திருக்கிறது. எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அதில் முதலீடு செய்துள்ளனர். 4,000 கோடி யுவான் மதிப்புக்கு அது உடனடியாக கடன் தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டும். மேலும் சில நிறுவனங்களும் இதைப்போன்ற நெருக்கடியைச் சந்தித்துவருவதால், உடனடித் தேவைக்காக 1,400 கோடி டாலர்களை ரொக்கமாகவே சந்தைக்கு வெள்ளிக்கிழமை (செப்.17) விடுவித்துள்ளது சீன மக்கள் வங்கி.

இந்நிலையில், சீனாவின் ரியல் எஸ்டேட் துறையும் கடன் சந்தைகளும் சந்தித்துவரும் சரிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. வங்கிகளிடம் கடனுக்கு மனு செய்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் கடன் கொடுத்தால் திரும்ப வசூலிப்பது கடினம் என்பதால், வங்கிகள் கடன் மனுக்களைப் பரிசீலிக்கவே தயங்குகின்றன. இதனால், ரொக்கத்துக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர் முதல் வாரத்திலிருந்து சீனர்களுக்கு ஒரு வாரம் தேசிய விடுமுறை. அதற்கு கோடிக்கணக்கானவர்கள் சொந்த ஊர் திரும்புவர். அதனாலும் பணத்துக்குத் தேவை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், நிறுவனங்கள் தாங்கள் மேலும் திவால் ஆகிவிடக் கூடாது என்பதில் அக்கறையாக இருப்பதால், ரொக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்காவில், லேமன் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிலைமை தங்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எல்லா நிறுவனங்களும் எச்சரிக்கையாக இருக்கின்றன. இதனால் வட்டி வீதமும் அதிகரித்துள்ளது.

எவர்கிராண்ட் நிறுவனம் திவாலாகிவிட்டால், பிற சீன நிறுவனங்களும் கடன் தொகையைக் கட்ட முடியாமல் திணறும் நிலை நிச்சயம் ஏற்படும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். பொருளாதாரத்தைத் தூண்டிவிடுவதற்காகச் சந்தையில் விடுவிக்கும் பணத்தை, சொத்துகளை வாங்கி வைத்துக்கொள்வதற்காக யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்ற கவலையும் சீனாவின் மக்கள் வங்கிக்கு (People's Bank of China) இருக்கிறது.

x