இடித்துரைக்கும் 'இக் நோபெல்’


இக் நோபெல் விருது மேடை

வாழைப்பழத் தோல் வழுக்கி பாதசாரி விழுவதன் பின்னிருக்கும் இயற்பியல் தத்துவம் என்னவாயிருக்கும்? கோப்பையின் விளிம்புகளில் ததும்பும் பீர் நுரைக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு என்ன? ஆஸ்திரேலியாவைப் பூர்விகமாகக் கொண்ட வோம்பட் என்ற பாலூட்டியின் கழிவு எப்போதும் கனசதுர வடிவில் விழுவதன் மர்மம் என்ன? இந்த அரிய வினாக்களுக்கு தங்களது பரந்த ஆய்வின் வழியே விடை கண்ட அறிவியலாளர்களுக்கு ‘இக் நோபெல்’ பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கவனிக்க.... நோபெல் அல்ல; இக் நோபெல்! ஆய்வுகளைப் போலவே இக் நோபெல் (Ig Nobel) விருதின் பின்னணியும் சுவாரசியங்கள் பொதிந்ததுதான்!

அண்ட்ரே கேம்

நோபெல் - இக் நோபெல்

மனிதகுலத்துக்குப் பெரும்பயன் விளைவிக்கும் அறிவியல் ஆய்வுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்கள் கண்டுபிடிப்பு, சமூகத்துக்கான பெரும் தொண்டு உள்ளிட்டவற்றுக்காக வழங்கப்படும் உலக அளவிலான அங்கீகாரமே நோபெல் பரிசு. இந்த நோபெல் அங்கீகாரத்தின் நேரெதிர் திசையில் கைக்கொட்டிச் சிரிப்பதுதான் ‘இக் நோபெல்’ விருதுகள். நியாயம், அ-நியாயம் என்பது போல, நோபெல் என்பதன் எதிர்ப்பதமே இக்-நோபெல். ஆய்வு எதுவானாலும் அதன் பின்னிருக்கும் அவா ஒன்றே விருது பரிசீலனைக்குத் தகுதியாக்குகிறது.

இக் நோபெலில் அறிவும் அறிவியலும் கடும் பகடிக்குள்ளாகின்றன. அறிவின் பெயரால் மண்டை வீங்கியவர்களால் புரிந்துகொள்ள முடியாத இந்தக் கட்டுடைப்பை, வரவேற்றுக் கொண்டாடுவோர் உலகெங்கும் நிறைந்திருக்கிறார்கள். தங்கள் ஆய்வின் தொடக்க காலத்தில் இக் நோபெல் பரிசும், காலக்கிரமத்தில் நோபெல் பரிசும் பெற்ற அறிவியலாளர்களும் உண்டு. அண்ட்ரே கேம் என்ற இயற்பியலாளர் தவளை மீதான காந்தப் பண்புகளை ஆராய்ந்ததற்காக 2000-ல் இக் நோபெல் பெற்றார். அதன் தொடர்ச்சியாக ‘கிராஃபீன்’(Graphene) மீதான மின்காந்த ஆய்வுகளுக்காக 2010-ல் அவருக்கு நோபெல் பரிசும் கிடைத்தது.

முதலில் சிரிப்பு பிறகே சிந்தனை

இதர உயிரினங்களிடமிருந்து மனிதனைப் பிரிப்பது சிரிப்பும், சிந்தனையுமே என்பார்கள். இந்த இரண்டில் சிந்தனையை அங்கீகரிப்பவர்கள் ஏனோ சிரிப்பைப் புறக்கணித்துவிடுகிறார்கள். காரணம், சிந்தனை என்றாலே அது சீரியஸான ஒன்றாக மக்களின் பொதுப்புத்தியில் ஆழப்பதிந்துவிட்டது. சிந்தனையாளர், புத்திஜீவி என்றாலே சிரிக்கக் கூடாது, குறைந்தபட்சம் நகைக்கக்கூட கூடாது என்று வைராக்கியம் கொண்டவர்கள் அதிகம். இந்தப் போலி மனப்பான்மையைக் கட்டுடைக்கும் வகையிலும் இக் நோபெல் பரிசுகள் முன்னிறுத்தப்படுகின்றன. மேற்பார்வையில் நமக்கு நகைப்பூட்டினாலும், பிற்பாடு ஆற அமரச் சிந்திக்கவும் தூண்டுவதே இக் நோபெல் விருதுகளின் சிறப்பம்சம். எளிமையாகச் சொல்வதென்றால், நம்மூர் திரைப்படங்களின் நகைச்சுவை நட்சத்திரங்களான என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் விவேக் பாணியிலான அணுகுமுறை எனலாம்.

இக் நோபெல் விருது விழாவில் பறக்கும் காகித விமானங்கள்

நகைச்சுவை அறிவியல் இதழ்

‘அனல்ஸ் ஆஃப் இம்பிராபபிள் ரிசர்ச்' (Annals of Improbable Research) என்ற அறிவியல் நகைச்சுவை இதழ், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரிலிருந்து வெளியாகிறது. பகடியே பிரதானமாய் கொண்ட இந்த இதழ் சார்பில், 1991 முதல் ஆண்டுதோறும் இக் நோபெல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசுக்கு உரிய ஆராய்ச்சி, பரிசுக்கான தேர்வு முறைகள், இக் நோபெல் விருது விழா என ஒவ்வொரு கட்டத்திலும் நையாண்டியே பிரதானமாய் இருக்கும்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கும் இந்த விருது விழா, சிறுபிள்ளைகளின் குதூகலச் சந்திப்பாகவே தொடங்கும். எல்லோரும் காகித விமானங்களைப் பறக்கவிட்டு உற்சாகத்தைப் பகிர்ந்துகொள்வார்கள். தொகுத்து வழங்குவோர், பார்வையாளர்கள், விருது பெறுவோர் - அளிப்போர் என எல்லோரிடத்தும் சுய பகடி விளையாடும். விருது மேடையில் மைக் பிடிப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேலாகப் பேச்சை நீட்டித்தால், அதற்கென்றே காத்திருக்கும் ஒரு குட்டிப்பெண் ஓடி வந்து, “ப்ளீஸ் பேச்சை நிறுத்துங்க, எனக்கு போரடிக்குது...” என்பாள். இக் நோபெல் பரிசுத்தொகையிலும் நையாண்டி உண்டு. கரன்ஸி மதிப்பு அதலபாதாளத்தில் வீழ்ந்த ஜிம்பாப்வே தேசத்து கரன்ஸி மதிப்பில் 10 டிரில்லியன் டாலருக்கு போலி கரன்ஸி பணமுடிப்பாக வழங்கப்படும்.

ஆய்வில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் காண்டாமிருகம்

கவனம் ஈர்த்த காண்டாமிருக ஆராய்ச்சி

கடந்த வாரம் வெளியான நடப்பாண்டு இக் நோபெல் விருது பட்டியலில், காண்டாமிருகங்களைத் தலைகீழாகத் தொங்கவிட்ட ஆய்வொன்று சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. ராபின் ரேட்கிளிஃப் என்ற விலங்கு ஆராய்ச்சியாளர் நமீபியாவில் இதற்கான ஆராய்ச்சியை நடத்தினார். ஆப்பிரிக்க காண்டாமிருகங்களை இடம்பெயர்த்து செல்கையில் ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு செல்வார்கள். ஒரு மாறுதலுக்குக் காண்டாமிருகங்களைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டபடி ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்று பரிசோதித்தார் ரெட்கிளிஃப். பக்கவாட்டுப் பயணத்தை விட தலைகீழ் பயணத்தில் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் திடமாகச் செயல்பட்டதை ஆய்வு முடிவுகள் உறுதிசெய்தன. இந்தப் பயணத்தில் காண்டாமிருகங்கள் வேடிக்கையாகக் காட்சியளித்தபோதும், அதன் பின்னிருக்கும் மருத்துவ அறிவியலின் விலங்கு நேயம் சிந்தனைக்கு உரியது. இப்படித்தான் மேற்பார்வைக்கு நகைப்பும், ஆழத்தில் வியப்புமாய் இக் நோபெல் பரிசுகள் தீர்மானிக்கப்படுகின்றன.

அடேங்கப்பா... ஆய்வுகள்

பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, நடப்பாண்டு இக் நோபெல் விருது விழா இணைய வழியில் நடந்தது. ஆனபோதும் 30 வருடங்களாக தொடரும் விருதுகளுக்குச் சளைக்காத வகையில் புதிய ஆய்வுகள் இருந்தன. ‘பாலுறவு மூக்கடைப்பைப் போக்குமா’ என்ற அரிய ஆராய்ச்சி, மருத்துவத்துக்கான இக் நோபெல் விருதைப் பெற்றது. மனிதருக்கும் பூனைக்கும் இடையிலான தனித்துவத் தகவல்தொடர்பை விளக்கும் ஆய்வுக்கு உயிரியல் விருது, வெவ்வேறு நாடுகளின் நடைபாதையில் உமிழப்படும் ‘பபிள் கம்’மில் இருக்கும் பாக்டீரியாக்களுக்கு இடையிலான ஒற்றுமையை ஆய்வு செய்தமைக்குச் சூழலியல் விருது, பாதசாரிகள் பக்கத்தில் கடப்பவரை இடிக்காது கடப்பதன் அறிவியல் தாத்பரிய ஆய்வுக்கு இயற்பியல் விருது, திரையரங்கில் குழுமியிருக்கும் பார்வையாளரிடமிருந்து வெளிப்படும் வாடைக்கும் திரைப்படத்தின் வகைமைக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஆய்வுக்கு வேதியியல் விருது, அரசியல்வாதிகளின் தொப்பைக்கும் ஊழலுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்ததற்குப் பொருளாதாரத்துக்கான பரிசு என விருதுகள் ஒவ்வொன்றும் விசித்திரமானவை.

இந்தியாவுக்கும் இக் நோபெல்

இந்தியாவிலிருந்தும் கணிசமானவர்கள் இக் நோபெல் விருது பெற்றிருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பிரதமர்களும் உண்டு. வாஜ்பேயி ஆட்சிக் காலத்தின் அணுகுண்டு வெடிப்பு பரிசோதனையில், உலக நாடுகளின் அதிருப்தியைப் பிரதிபலிக்கும் வகையில் அவருக்கு அமைதிக்கான விருதை அறிவித்தார்கள். அதேபோல கடந்த ஆண்டு கரோனா தொற்று உச்சத்திலிருந்தபோது, நடைமுறைச் சிக்கல்களைக் கண்டுகொள்ளாது புராண காலத்து பாரம்பரிய மருத்துவத்தின் புகழ் பாடிய பிரதமர் மோடிக்கு, மருத்துவ கல்விக்கான இக் நோபெல் அளிக்கப்பட்டது. பெருந்தொற்றுப் பரவலை முறையாகக் கையாளாத பல்வேறு தேசங்களின் தலைவர்களுடன் இந்தப் பரிசைப் பகிர்ந்துகொண்டார் மோடி!

x