தென்சீனக் கடலில் மையம் கொள்ளும் அமெரிக்க - சீன மோதல் புயல்


உலகின் முதன்மை வல்லரசுகளான அமெரிக்கா - சீனா இடையிலான உரசல், உக்கிரமடைவதற்கான சூழல்கள் அதிகரித்திருக்கின்றன. கரோனா பெருந்தொற்று உருவானதை முன்வைத்து உருப்பெற்ற இந்த மோதல் புயல், தற்போது தென்சீனக் கடலில் மையங்கொள்கிறது.

தென் சீனக் கடலில் சீனாவின் வல்லாதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பிலிப்பைன்ஸ், அமெரிக்காவின் சகாயத்தை எதிர்நோக்கத் தொடங்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிய பின்னர், ஆசியா மீதான அமெரிக்காவின் பிடி தளர்கிறதா எனும் பேச்சுகள் எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் மூக்கை நுழைப்பதன் மூலம் அந்தக் கருத்துகளைத் தகர்க்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பதை உணர முடிகிறது.

சீனப் போர்க்கப்பலில் கண்காணிக்கும் வீரர்

தென்சீனக் கடலில் சீனாவின் செயற்கைத் தீவு (செயற்கைக் கோள் படம்)

ஆப்கன் வெளியே... பிலிப்பைன்ஸ் உள்ளே!

20 ஆண்டுகள் காபந்து செய்தபோதும் தாலிபான்களை அடக்க முடியாதது, நம்பியிருந்த அப்பாவி மக்களை பரிதவிக்கவிட்டு வெளியேறியது என அமெரிக்காவின் ஆப்கன் அத்தியாயம் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. உலக நாடுகளின் ரட்சகன் என்ற ஆதர்ச பிம்பம் உடைபடுவதை அமெரிக்கா எப்போதும் விரும்புவதில்லை. இப்போதைக்கு உடனடி தேவையாக, ஓர் அப்பாவி தேசமும் அதன் சர்வதேச கவனத்துக்குள்ளான பிரச்சினையும் அமெரிக்காவுக்கு அவசியமாகிறது.

தென்சீனக் கடல் பகுதி (கூகுள் எர்த் படம்)

அப்படியான விவகாரமும், இந்த அதிருப்தி விமர்சனங்களை பின்னிருந்து கிளப்புவதாக அமெரிக்கா சந்தேகிக்கும் சீனாவுக்கு எதிராக இருப்பின் இன்னும் உத்தமம். அமெரிக்காவின் இந்தக் கணக்குகளில் சரியாகக் கனிந்துவந்திருப்பதுதான், தென்சீனக் கடல் பிரச்சினை. இந்தக் கடல்பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாய் அறைகூவல் விடுக்கும் பிலிப்பைன்ஸ் மீது கரிசனத்துடன் அமெரிக்காவின் கவனம் திரும்பி இருக்கிறது. அந்த வகையில், அமெரிக்காவின் ஆடுகளத்தில் தற்போது ஆப்கன் வெளியேற்றப்பட்டு அந்த இடத்தை பிலிப்பைன்ஸ் பிடிக்கிறது.

தென்சீனக் கடலில் வலம்வரும் போர்க்கப்பலில் அதிபர் ஜி ஜின்பிங்

கடல் எல்லையை வளைக்கும் சீனா

கடந்த சில ஆண்டுகளாகவே தென்சீனக் கடலில் தனது கடல் எல்லைக்கு அப்பாலும் வல்லாதிக்கத்தை விரிவு செய்யும் சீனாவால், அண்டை நாடுகள் அவதியடைவது சர்வதேச பிரச்சினையாக வளர்ந்திருக்கிறது. மேற்பரப்பில் மீன் வளம் என்றால் கடல் ஆழத்தில் ஹைட்ரோகார்பன் என அபரிமிதமான இயற்கை கொடை சூழந்த கடல்வெளியைச் சீனா தனி பாணியில் வளைத்துப் போட்டது. தென்சீனக் கடலில் சிதறிக்கிடக்கும் மனிதர்கள் வாழத்தகுதியற்ற தீவுகளை முதலில் ஆக்கிரமித்தது. பின்னர், அதை ஒட்டியே செயற்கைத் தீவு தொகுப்புகளை பிரம்மாண்டமாய் உருவாக்கியது. பின்னர் அந்தத் தீவுகளில் விமான தளம், படையணிகளைக் குவித்து அங்கிருந்தும் தனக்கான புதிய கடல் எல்லையை விரிவுசெய்தது சீனா.

ஒரு தேசத்தின் நிலப்பரப்பிலிருந்தே குறிப்பிட்ட கடல் மைல்களில் அதன் கடல் எல்லைகள் தீர்மானிக்கப்படும். கடல் மத்தியில் நிலப்பரப்பை நீட்டிப்பதன் மூலம் கடல் எல்லையையும் முறைகேடாய் நீட்டித்திருக்கிறது சீனா. இந்த அத்துமீறல் ஆக்கிரமிப்புகளால் அண்டை நாடுகளின் கடல் எல்லைகள் அடிவாங்க ஆரம்பித்தன. அதன் மீன்பிடிப்பு முதல் கடல் ஆராய்ச்சி, பாதுகாப்பு போன்றவையும் கேள்விக்குள்ளாகின. அந்தப் பகுதியின் ஆகப்பெரும் வல்லரசாகவும், அண்டை நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களில் பிரதான பங்குதாரராகவும் இருப்பதால் சீனாவை முறைத்துக்கொள்வதில் மலேசியா, புருனே, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட அந்தப் பகுதி நாடுகள் தயக்கம் காட்டியும்வந்தன.

அமெரிக்கக் கடற்படை

பிலிப்பைன்ஸின் பின்னே பெரியண்ணன்

பல வருடங்களாக நிதானமாக நடந்துவந்த தென்சீனக் கடல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை, இந்தக் கரோனா காலத்தில் முழுவீச்சில் முடித்திருக்கிறது சீனா. அமெரிக்காவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்திய பின்னரே, தென்சீனக் கடல் கொந்தளித்தது. எவரும் உரிமை கோராத ஆளரவமற்ற அநாமதேயத் தீவுகளை தன்வயப்படுத்தியதோடு, பிரம்மாண்ட செயற்கைத் தீவுகளை உருவாக்கியும் தனது கடல் எல்லைகளை அண்டை நாடுகளின் கடல் எல்லைகளுக்குள்ளும் ஊடுருவவிட்டிருக்கிறது சீனா.

அதன் தொடர் அடாவடியாக, இந்த செப்டம்பர் முதல் புதிய கடல்சார் விதிகளையும் சீனா பிறப்பித்திருக்கிறது. அதன்படி, தென்சீனக் கடலைக் கடக்கும் 95 சதவீத கடல் போக்குவரத்தைச் சீனா கண்காணிக்க ஏதுவாகும். ‘அந்நிய’ கப்பல்கள் அனைத்தும் தங்களது போக்குவரத்து மற்றும் சுமக்கும் சரக்குகள் விவரத்தையும் சீன அதிகாரிகளுக்கு முன்கூட்டியே முறைப்படி தெரிவிக்க வேண்டும். இதனால், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு தங்கள் கடல் எல்லை நடமாட்டத்துக்கும் இனி சீனாவின் தயவு தேவைப்படும். சீனாவின் கண்காணிப்பு மற்றும் தணிக்கைக்கு ஆளாகும் கடல் வழி சரக்குகளில் ‘கதிரியக்கப் பொருட்கள் மற்றும் ஆயுதத் தளவாடங்கள்’ முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. இது உலகமெங்கும் படைத்தளங்களை நிறுவி பராமரித்துவரும் அமெரிக்காவை அதிகம் சீண்டியுள்ளது.

கமலா ஹாரிஸ்

க்வாட்’டால் வால் சுருட்டிய டிராகன்

ஆப்கன் விவகாரத்தால் அதிகரித்த ஆசிய நாடுகளின் அதிருப்தியை தணிக்க, ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆப்கன் விவகாரத்தைவிட, சீனாவின் தென்சீனக் கடல் அத்துமீறல் குறித்தே அப்போது அவர் அதிகம் பேசினார். சிங்கப்பூரில் அவர் ஆற்றிய உரையில், “சர்வதேச சட்டங்களைச் சீனா சட்டை செய்வதில்லை. சர்வதேசத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மீறி தென்சீனக் கடலின் பெரும்பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட நாடுகளின் கடல்சார் உரிமைக்கும், இறையாண்மைக்கும் அமெரிக்கா நிச்சயம் துணை நிற்கும். இந்த விவகாரத்தில் பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தல் எழுந்தால் அமெரிக்கா முன்வந்து உதவும்” என்று முழங்கியிருக்கிறார்.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற சூட்டில், சீனாவின் கரோனா நதிமூலத்தை ஆராயும்படி உளவு முகமைகளுக்குக் கெடுவுடன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஜி ஜின்பிங் தேசத்தின் இரும்புத்திரை அமெரிக்க உளவுக்கு வாய்ப்பளிக்காததில், சீனாவுக்கு எதிரான அடுத்த வியூகமாகத் தென்சீனக் கடல் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறது அமெரிக்கா. பிலிப்பைன்ஸ் எல்லைக்குள் ராணுவத் தளவாட மையங்கள், நட்பு ரீதியில் பிலிப்பைன்ஸ் ராணுவத்துக்கான பயிற்சிகள் என பிலிப்பைன்ஸ் மண்ணில் ஏற்கெனவே புழங்கிவரும் அமெரிக்கா, இனி தனது துருப்புகளை தரையிலும் கடற்பரப்பிலுமாக மேலும் குவிக்கும். சீனாவுக்கு எதிரான நகர்வாக ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் நாடுகளுடன் ‘க்வாட்’ கூட்டணியை அமெரிக்கா ஏற்கெனவே வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. கடந்த வருடம் சீனாவின் செயற்கைத் தீவு விவகாரம் உச்சத்திலிருந்தபோது, இந்தியா உள்ளிட்ட இந்த க்வாட் தேசங்களின் போர்க்கப்பல்கள் தென்சீனக் கடலில் உலா வந்து, சீன டிராகனை ஓரளவோடு வால் சுருட்டவைத்தன.

தென்சீனக் கடலில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள்

தனது தலையிலும் பாதத்திலும் குடைச்சல்களை மேற்கொள்ளும் சீனாவுக்கு எதிரான வியூகமாக, இந்தியாவுக்கும் ‘க்வாட்’ கூட்டணி இப்போது அவசியமானதாகிறது. அதன் அங்கமாக இதுவரை இந்திய மண்ணில் அமெரிக்க படைத்தளங்கள் இல்லாத குறையைப் போக்கி, அந்தமான் தீவுகளில் அவற்றை நிர்மாணிக்கும் ஏற்பாடுகளும் நெருங்கி வருகின்றன. இனி சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நகர்வுகளில் பிலிப்பைன்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் முக்கியப் பங்கு இருக்கும் என எதிர்பார்க்கலாம்!

அமெரிக்க ராணுவத்தினர்...

பெட்டிச் செய்தி

உலக ரட்சகனா அமெரிக்கா?

எல்லா தேசங்களுமே தங்கள் எல்லைகளின் பாதுகாப்புக்கென ராணுவத்தை வைத்துப் பராமரிப்பதோடு, அதற்காகப் பெருமளவு செலவழித்தும் வருகின்றன. பல நாடுகள் பிற நாடுகளிலும் தனியாகப் படைத்தளங்களை வைத்துள்ளன. இந்தியாகூட தஜிகிஸ்தான், மொரிஷியஸ், பூடான், செஷல்ஸ், ஓமன் நாடுகளில் சிறிய அளவில் படைத்தளங்கள் வைத்திருக்கிறது. நட்பு தேசத்தின் கோரல், வட்டாரப் பாதுகாப்பு இப்படி எல்லை கடந்த ராணுவத் தளங்களின் தேவைகள் அமைந்திருக்கும். அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு, வெளியில் சொல்லப்படும் காரணங்களைவிட உள்நோக்கங்களே அதிகமிருக்கும். எதிரி தேசத்தின் அருகில் சென்று புஜம் தட்டுவது, நாடுகளை ஆக்கிரமித்து அதன் இயற்கை வளங்கள், எரிபொருட்களைச் சுரண்டுவது, புதிதாய் வடிவமைக்கப்பட்ட ஆயுதத் தளவாடங்களை நிஜமான போர்க்களங்களில் பரிசோதித்து அறிவது என அந்த நிழல் நோக்கங்கள் நீளும்.

60 நாடுகளில் 750-க்கும் மேலான படைத்தளங்களைப் பராமரித்துவருகிறது அமெரிக்கா. அந்த வகையில் உலக அளவில் அமெரிக்காவே முதலிடம் வகிக்கிறது. 2-ம் உலகப்போர் முடிவில், அமெரிக்காவின் ஆதிக்கம் ஓங்கியதில் தோல்வியுற்ற நாடுகளில் நிலையான ஆட்சி அமைக்க உதவியாக, அங்கே உருவாக்கப்பட்ட அமெரிக்க ராணுவத் தளங்கள் அதன் நோக்கம் முடிந்த பிறகும் தொடர்கின்றன. அந்த வகையில் ஜெர்மனி, ஜப்பான் தேசங்களிலும் கொரியப் போரின் தொடர்ச்சியாகத் தென்கொரியாவிலுமாக, மொத்தம் 215 அமெரிக்க தளங்கள் செயல்படுகின்றன. உலகப் போர் மூண்டால் அமெரிக்காவிலிருந்து படை திரட்டி வருவதற்குப் பதிலாக, உலகின் எந்த மூலையில் இருந்தபடியும் எதிரிக்குப் பதிலடி தர இந்தப் படைத்தளங்கள் உதவும். மேலும், தனக்கு அச்சுறுத்தலாகும் நாடுகளை மிரட்டவும் அதன் அருகமை தேசத்தில் ராணுவத் தளங்களை நிலையாக நிறுத்தியுள்ளது அமெரிக்கா.

ஆனால், அமெரிக்காவின் ‘உலக போலீஸ்’ உதார்கள், நிஜத்தில் பெரிதாய் உதவாது போனதற்கும் உதாரணங்கள் நிறைய உண்டு. க்யூபா மற்றும் வியட்நாமில் தொடங்கி குட்டி நாடுகள் பலவும் இந்தப் பெரியண்ணனை ஆண்டுக்கணக்கில் படுத்தி எடுத்திருக்கின்றன. இந்த வரிசையில் அண்மை உதாரணம்தான் ஆப்கானிஸ்தான்!

அமெரிக்காவின் இந்த அழிச்சாட்டியங்கள் பூமராங்காகி அந்நாட்டின் அமைதிக்கும் குந்தகம் விளைவிப்பதுண்டு. ‘செப்டம்பர் 11’ போன்ற தாக்குதல்கள், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உயிரச்சத்திலும் அதையொட்டிய உளவியல் அழுத்தத்திலும் வாழ்பவர்கள் அமெரிக்காவில் அதிகம். மொத்தத்தில், உலக ரட்சகனாகும் ஆசையில் சொந்த மக்களின் நிம்மதியைக் காவு வாங்கிவருகிறது அமெரிக்கா!

x