ஆப்கானிஸ்தானில், ஐஎஸ் கொராசான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டது அப்பாவிப் பொதுமக்கள்தான் என அமெரிக்கா ஒப்புக்கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 26-ல், காபூல் விமான நிலையம் அருகே ஐஎஸ் கோராசான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுவெடிப்புத் தாக்குதலில், ஆப்கனிலிருந்து வெளியேறக் காத்திருந்த பொதுமக்கள், அமெரிக்க வீரர்கள் உட்பட 170-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பழிவாங்கும் விதத்தில், ஆகஸ்ட் 29-ல், காபூல் விமான நிலையம் அருகில் ஐஎஸ் கொராசான் பயங்கரவாதிகளைக் குறிவைத்து டிரோன் மூலம் அமெரிக்க ராணுவம் குண்டுவீசியதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டது ஐஎஸ் கொராசான் பயங்கரவாதிகள் அல்ல; அப்பாவி மக்கள்தான் என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய படைப்பிரிவுத் தளபதி ஜெனரல் பிராங்க் மெக்கன்ஸி, இன்று (செப்.18) ஒப்புக்கொண்டார். இந்தத் தாக்குதலில் மொத்தம் 10 பேர் உயிரிழந்தார்கள்.
விமான நிலையத்துக்கு அருகில் சென்றுகொண்டிருந்த வேனில் ஓட்டுநரைப் பயங்கரவாதி எனக் கருதி, அமெரிக்க ராணுவத்தினர் அந்த வேன் மீது டிரோன் மூலம் குண்டுவீசினர். அப்போது அந்த வேனில் இருந்த 10 பேரில் 7 பேர் குழந்தைகள். அவர்கள் அனைவரும் அந்தத் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குண்டுவீச்சில் வேன் வெடித்து சிதறிய சில விநாடிகளுக்கெல்லாம் மீண்டும் வெடியோசை கேட்டது. அது வேனில் பயங்கரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்ததால் ஏற்பட்ட சத்தம் என்றே அமெரிக்கா அப்போது கூறியது. வேனிலிருந்த எரிபொருள் டேங்கர் வெடித்த ஓசை என்று பிறகு தெரிந்தது. உண்மையில் அந்த வேனின் ஓட்டுநர் சர்வதேச உதவிக் குழு ஒன்றுக்காகப் பணியாற்றிவந்த சாமானிய ஆப்கானியர். அந்த வேனில் இருந்தது வெறும் தண்ணீர்க் குடுவைகள்தான் என்பதும் தெரியவந்திருக்கிறது.
இச்சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் மட்டுமல்லாது, வெளியுறவுத் துறையும் வருத்தம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு தரப்படும் என்றும் பென்டகன் தெரிவித்திருக்கிறது.