சீன-பாகிஸ்தான் பொருளாதார தொழில் திட்ட அமலில் தொய்வு


சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை

சீன-பாகிஸ்தான் பொருளாதார தொழில்திட்ட அமலில், கடந்த 3 ஆண்டுகளாகவே வேகம் போதாது என்று சீனா மிகவும் கவலைப்படுகிறது.

திட்டமிடல்-வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்த சலீம் மாண்ட்விவல்லா, இதைக் கூட்டத்திலேயே தெரிவித்தார். ”சீன-பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தை நீங்கள் நாசப்படுத்திவிட்டீர்கள் என்றே பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் என்னைப் பார்த்துக் கூறினார்” என்று மாண்ட்விவல்லா விவரித்தார். இந்த விவகாரத்தில், பிரதமருக்குச் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றும் காலித் மன்சூரும் இந்தக் கருத்தை ஆமோதித்தார்.

செய்துமுடித்த வேலைகளுக்கு முழுமையாகப் பணம் தரப்படவில்லை, அடுத்த வேலைத்திட்டங்கள் உரியக் காலத்தில் தொடங்கப்படவில்லை, திட்டங்களை அமல்படுத்துவதில் போதிய ஒருங்கிணைப்பு இல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டன.

பாகிஸ்தானில் இப்போது செயல்படும் 135 சீன நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதே, அரசின் முன்னுரிமை என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 1,570 கோடி டாலர்கள் மதிப்பில் 21 திட்டங்கள் மட்டுமே முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 10 திட்டங்கள் 5,320 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கானவை. உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கம்பி வழியாகக் கொண்டு செல்லுதல், சாலைகள் அமைத்தல், மக்கள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்யும் மெட்ரோ போன்ற ரயில் திட்டங்கள், கண்ணாடியிழை வடங்களை பூமியில் புதைத்தல் ஆகியவை இதர திட்டங்கள். தாங்கள் கூறும் பரிந்துரைகளையும் திட்டங்களையும் திட்டமிடல் அமைச்சகம், மாநில, மத்திய நிலையில் பரிசீலிப்பதே இல்லை என்று மாண்ட்விவல்லா குற்றஞ்சாட்டினார். இவற்றுக்கெல்லாம் இறுதி ஒப்புதல் தருவது தேசிய பொருளாதாரப் பேரவைதான் என்று திட்டமிடல் அமைச்சர் ஆசாத் உமர் அவருக்குப் பதில் அளித்தார்.

x