அமெரிக்கா வாழ் முஸ்லிம் குழுக்கள், ஹில்டன் குழும ஹோட்டல்களைப் புறக்கணிப்பது என்று நேற்று (செப்.16) முடிவெடுத்தன.
சீன நாட்டின் ஜின்ஜியாங் மாநிலத்தில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், புதிதாக ஹோட்டலைக் கட்ட அந்தக் குழுமம் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, இனி ஹில்டன் குழும ஹோட்டல்களுக்குச் செல்வதில்லை என்று 40-க்கும் மேற்பட்ட அமெரிக்க-முஸ்லிம் மனித உரிமைக் குழுக்கள் முடிவு செய்துள்ளன. வர்ஜீனியாவில் நிருபர்களிடம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. மசூதி இருந்த இடத்தில் புதிய ஹோட்டல் கட்டும் முடிவைக் கைவிடுமாறு தாங்கள் கூறியதை ஏற்கும் நிலையில் குழுமம் இல்லை என்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக முஸ்லிம்கள் தெரிவித்தனர். முஸ்லிம் குழுக்கள் சார்பில் நிஹாத் அவத் இதைத் தெரிவிக்கிறார்.
உய்குர் மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்வதை ஒடுக்க, சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவோரைத் தொடர்ந்து ஏதாவது ஒரு காரணம் கூறி சிறையில் அடைக்கிறது. பெண்களுக்குக் கட்டாய கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது. குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பலவந்தமாகப் பிரித்து தனியே தங்கவைக்கப்படுகின்றனர். முஸ்லிம்களின் மத, கலாச்சார அடையாளங்கள், நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன.
ஹோடான் என்ற இடத்தில் 2018-ல் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ஹில்டன் குழுமம் புதிய ஹோட்டல் கட்ட சீன அரசு அனுமதி வழங்கியது. அமெரிக்காவின் ஜனநாயக, குடியரசு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஜூலையில் ஹில்டன் குழுமத்திடம் விடுத்த வேண்டுகோளில், இந்த ஹோட்டல் கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு கோரின.
2017 முதல் 2020 வரை ஜின்ஜியாங் பகுதியில் 16,000 மசூதிகள் முழுமையாகவோ, பகுதியாகவோ இடித்து அழிக்கப்பட்டன. மசூதிகளின் தனித்த அடையாளமான மினராக்கள் தகர்க்கப்பட்டன. இந்த அழிவுகள் செயற்கைக் கோள்களிலிருந்து எடுத்த புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் முதல் மே வரையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன நிருபர்கள் ஜின்ஜியாங் பகுதியில், மசூதிகள் பகுதியாகவோ முழுமையாகவோ இடிக்கப்பட்டதை நேரில் பார்த்தனர்.
10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்கள், ஜின்ஜியாங் மாநிலத்தில் கடுமையான உடலுழைப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கென்று முகாம்கள் ஏதும் இல்லை என்று முதலில் மறுத்த சீன அரசு, அவை தொழிற்பயிற்சி மையங்கள் - முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாறிவிடாமலிருக்க இந்த ஏற்பாடு என்று கூறியது. சீனத்தில் மத அடிப்படையில் யாரும் ஒடுக்கப்படுவது இல்லை என்று கூறும் சீன அரசு, உடலுழைப்பு முகாம் எதுவும் தங்கள் நாட்டில் இல்லை என்கிறது.
ஜின்ஜியாங் மாநிலத்தில் கடுமையாக வேலைவாங்கப்படும் முஸ்லிம் தொழிலாளர்களுக்கு, குறைந்த ஊதியமே தரப்படுகிறது, மேற்கத்திய நாடுகளின் எச்அண்ட்எம், பர்பரி, நைக் ஆகிய நிறுவனங்கள் அவர்கள் தயாரிக்கும் பொருட்களைத்தான் மலிவாக வாங்கி லாபம் அடைகின்றன என்ற தகவல் வெளியானதால், ஏராளமான நுகர்வுக் குழுக்கள் அந்த நிறுவனங்களின் பொருட்களைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டன. ஜெர்மன் நிறுவனங்களும் இப்படிக் குறைந்த கூலிக்கு சீன உய்குர்கள் தயாரிக்கும் பண்டங்களை வாங்கி லாபம் ஈட்டுகின்றன என்று மனித உரிமைகள் குழு ஜெர்மன் அரசிடம் புகார் செய்துள்ளது.
உய்குரில் முஸ்லிம்கள் மனித உரிமைகளின்றி நசுக்கப்படுகிறார்கள் என்கிற புகார்களைத் தங்களால் முழுமையாக விசாரிக்க முடியாததால், அறிக்கையை விவரங்களின்றி இறுதி செய்ய நேர்ந்தது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுத் தலைவர் மிசேல் பாக்லெட் கடந்த திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.