அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து 14 ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல்போன மகள், முகநூல் பதிவு மூலம் தாயை இனம் கண்டு மீண்டும் அவருடன் சேர்ந்துவிட்டார். கிளெர்மான்ட் காவல் துறை இதற்குக் காரணமாக இருந்து மக்களால் பெரிதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஏஞ்செலிகா வென்சஸ்-சால்கடோ தாய். அவருடைய 6 வயது மகள் ஜேக்குலின் ஹெர்னாண்டஸ், 14 ஆண்டுகளுக்கு முன்னால் மெக்ஸிகோ நாட்டுக்குக் கடத்திச் செல்லப்பட்டார். கடத்தியது ஜேக்குலினின் தந்தை பப்லோ ஹெர்னாண்டஸ்தான். 20 வயதான ஜேக்குலின் தன்னுடைய தாய் ஏஞ்செலிகா, அமெரிக்க நாட்டில்தான் எங்கோ வசிக்கிறார் என்பதை அறிந்து முகநூல் மூலம் அவரைத் தொடர்பு கொண்டார்.
”உங்களுடைய மகளான நான் மெக்ஸிகோவில் இருக்கிறேன், நீங்கள் இதை நம்பினால் நாம் அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் சந்திக்கலாம்” என்றார். உடனே ஏஞ்செலிகா, கிளெர்மான்ட் காவல் துறைக்கு இந்த மாதம் 2-ம் நாள் இது தொடர்பாக தகவல் தெரிவித்தார்.
புளோரிடா, டெக்சாஸ் நகர காவல் துறை அதிகாரிகளும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் கூட்டாகச் சேர்ந்து, இந்தச் சந்திப்பின்போது உண்மை எதுவென்று அறிய முடிவு செய்தனர். முன்னதாக இவ்விரு பெண்கள் குறித்தும் விவரங்களைத் திரட்டினர். அந்தப் பெண் ஏஞ்செலிகாவின் சொந்த மகள்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். இருவரும் சந்தித்தபோது காவல் துறையினர் இதைத் தெரிவித்ததுடன் தாய்க்கும் மகளுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
முகநூலில் இந்தச் செய்தியைப் படித்த பலரும் உணர்ச்சி மேலிட காவல் துறையை வாழ்த்தியிருப்பதுடன், இருவரின் நலனுக்காக ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.