ஒவ்வொரு ஆப்கன் குழந்தையும் இப்போது பசியோடுதான் இரவில் படுக்கிறது. குழந்தைகளுக்கு ரொட்டி சுட்டுத்தர வீடுகளில் ஒரு பை அளவுக்குக் கூட கோதுமை மாவு இல்லை, சமைப்பதற்கு எண்ணெயும் இல்லை.
தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்து ஒரு மாதம் ஆன பிறகு புதிய அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியாக வந்திருக்கிறது உணவுப் பற்றாக்குறை.
நாற்பதாண்டுகள் இடைவிடாமல் நடந்த போருக்குப் பிறகு காபூல் உள்பட பெரும்பாலான நகரங்களிலும் கிராமங்களிலும் அமைதி நிலவினாலும் மக்கள் கடுமையான பொருளாதார, உணவு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதை புதிய அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை.
காபூலின் புதிய ஆட்சியாளர்கள் நல்லாட்சி தருவதாக வாக்குறுதி அளித்தாலும் மேற்கத்திய நாடுகள் நம்புவதாக இல்லை. பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர், செய்தியாளர்கள் கட்டி வைத்து உதைக்கப்படுகிறார்கள், அரசை எதிர்த்துப் பேசுகிறவர்கள் நடுவீதியில் சுட்டு கொல்லப்படுகிறார்கள் என்ற செய்திகள்தாம் அதிகம் வலம்வருகின்றன. புதிய அரசுக்கு அங்கீகாரத்தையும் வழங்கவில்லை. வெளிநாடுகளில் மத்திய வங்கிகளில் முடக்கப்பட்ட ஆப்கன் பணத்தை எப்போது வழங்குவார்கள் என்பதும் நிச்சயமில்லாமல் இருக்கிறது.
தாலிபான்கள் போர் நிகழ்த்திக் கொண்டிருந்த காலத்திலேயே ஆப்கானிஸ்தானின் மாநிலங்களில் பெரும்பாலானவற்றில் மழையில்லாமல் வறட்சியும் பஞ்சமும் தொடங்கிவிட்டது. இப்போது கிராமங்களில் மக்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் யாரை அணுகுவது, எங்கே பெறுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஏராளமானோர், நகரங்களுக்குச் சென்றால் ஒரு வேளை கஞ்சியாவது குடிக்கலாம் என்று குழந்தைகளையும் முதியவர்களையும் கூட்டிக்கொண்டு நகரங்களை நோக்கி நடக்கின்றனர். கரோனா பெருந்தொற்றின் தாண்டவமும் இன்னமும் முடியவில்லை.
ஒரு கோடியே நாற்பது லட்சம் ஆப்கானிஸ்தானர்களும் வெகு விரைவில் பட்டினி, பசி, பஞ்சத்துக்கு ஆளாகிவிடுவார்கள் என்கிற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆப்கன் குழந்தையும் இப்போது பசியோடுதான் இரவில் படுக்கிறது. குழந்தைகளுக்கு ரொட்டி சுட்டுத்தர வீடுகளில் ஒரு பை அளவுக்குக் கூட கோதுமை மாவு இல்லை, சமைப்பதற்கு எண்ணெயும் இல்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, வேளாண்துறை அலுவலகத்தைச் சேர்ந்த இயக்குநர் ரீன் பால்சன் இதை உறுதிப்படுத்துகிறார். காபூலில் மட்டும் 40 லட்சம் ஆப்கானியர்கள் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர் என்கிறார்.
ஆப்கானியர்களில் 70 சதவீதம் பேர் கிராமங்களில்தான் வாழ்கின்றனர். 73 லட்சம் மக்களை நேரடியாகப் பாதிக்கும் அளவுக்கு வறட்சி தாண்டவமாடுகிறது. நாட்டின் 34 மாநிலங்களில் 25 வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன. இந்த கிராம மக்கள் பசி பட்டினியால் மட்டுமல்ல கரோனா பெருந்தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் பால்சன்.
ஆப்கானிஸ்தானில் குளிர்காலத்தில் கோதுமை விதைப்பது வழக்கம். இந்த முறை வங்கிகளிடம் நிதியில்லாததால் அவை சீர்குலைந்துள்ளன. மக்களிடமும் கைவசம் ரொக்கம் அதிகமில்லை. ஏற்கெனவே உணவு தானியத்துக்குப் பற்றாக்குறை. குளிர்கால சாகுபடியையும் மேற்கொள்ள முடியாமல் போனால் ஊட்டச்சத்துக் குறைவாலேயே பல லட்சம் பேர் பாதிக்கப்பட நேரும். வங்கிகள் எதிரில் அன்றாடம் மிகப் பெரிய வரிசையில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர். வாரத்துக்கு 200 டாலர்கள் மட்டுமே அவரவர் கணக்கிலிருந்து எடுக்கலாம் என்று வங்கித்துறை கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இது ஆப்கானிய ரூபாய் மதிப்பில் 20,000. ஆப்கானிஸ்தானில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. அத்தியாவசியப் பொருள்கள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. வேலைவாய்ப்பும் இல்லை.
கோதுமையும் எண்ணெயும் வாங்க பணம் கிடைக்காதா என்ற நப்பாசையில் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து என்னவெல்லாமோ பொருள்களைக் கொண்டுவந்து விற்கப் பார்க்கின்றனர். வசதியுள்ளவர்கள் யாருமே இல்லாததால் எல்லோருமே விற்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானுக்கு உதவ 100 கோடி டாலர்கள் தருவதாகப் பல நாடுகள் அறிவித்தன. ஆனால், அறிவித்தபடி நிதியளிக்கவில்லை. ஆப்கானிஸ்தானமே சீர்குலைந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் அந்தோனியோ குத்தரஸ் எச்சரிக்கிறார். அன்னிய நாடுகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்த காலத்திலும் கூட வளர முடியாமல், மக்கள்தொகைப் பெருக்கம் தடுத்தது. இப்போது வேலைவாய்ப்பு அறவே இல்லை. அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் முதலே ஊதியம் தரப்படவில்லை. போர் நிறுத்தத்தை அனைவரும் வரவேற்றாலும் பொருளாதாரம் தொடுக்கும் போரின் விளைவு கடுமையாக இருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அவசர அவசரமாக தங்களுடைய படைகளையும் குடிமக்களையும் விமானங்களில் ஏற்றிச் சென்ற பிறகு காபூல் விமான நிலையம் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதற்குப் பிறகு எந்த நாட்டு விமானமும் வரவில்லை. அவசர உதவிகளுடன் சில நட்பு நாடுகளின் விமானங்கள் வந்தன. அவை கொண்டுவந்தவை அனைவருக்கும் போதுமானவையாக இல்லை. இப்போது மேலை நாடுகளின் அங்கீகாரம் இல்லாததால் பிற நாடுகளும் ஆப்கானுடன் உறவுகொள்ளத் தயங்குகின்றன. ஆப்கானிஸ்தானுக்குச் சொந்தமான 900 கோடி டாலர்கள் வெளிநாடுகளின் மத்திய வங்கிகளில் முடங்கியுள்ளன. அவை விடுவிக்கப்பட்டு கோதுமை உள்ளிட்டவற்றை வாங்க முடிந்தால்கூட நிலைமையை ஓரளவுக்குச் சமாளிக்க முடியும்.