ஐஎஸ்ஐ பயங்கரவாதிகளுக்கு பலூசிஸ்தானில் பயிற்சி


டெல்லி, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற, ஐஎஸ்ஐ பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பலூசிஸ்தானில் சிறப்புப் பயிற்சி அளித்துள்ளனர். டெல்லி போலீஸாரிடம் பிடிபட்ட பயங்கரவாதிகளை விசாரித்தபோது இது தெரிந்தது.

இந்தியாவைச் சேர்ந்த இவர்களைத் தேர்வு செய்து, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் ராணுவம் மூலம் நாசவேலைகளில் பயிற்சிகளையும் அளித்து இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து ஒருங்கிணைத்தவர் மும்பையின் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் என்று சொல்லப்படுகிறது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயிடம் பயிற்சி பெற்று அவர்களுடைய கட்டளைப்படி நாச வேலைகளைச் செய்ய இந்தியாவில் தருணம் பார்த்திருந்த ஆறு பயங்கரவாதிகளை டெல்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இவர்களில் ஜீஷன் கமார், ஒசாமா என்ற இருவரையும் அதிகாரிகள் விசாரித்தபோது தெரியவந்தவை:

”இருவரும் இந்தியாவிலிருந்து கடல் வழியாக படகுகளில் பாகிஸ்தானின் கதார் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை அழைத்துச் செல்லும்போதே ஒரே படகில் செல்லாமல் அடிக்கடி படகுகள் மாற்றப்பட்டன. அவர்களை துறைமுகத்தில் வரவேற்ற ஒரு பாகிஸ்தானியர் சிந்து மாநிலத்தில் இருந்த தட்டா என்ற பகுதியின் ரகசியப் பயிற்சி முகாமுக்கு அழைத்துச் சென்றார். அங்கே காஜி என்ற உயர் அதிகாரி அவர்களை வரவேற்றார். அவர் லெப்டினென்டா அல்லது மேஜரா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் ஜப்பார், ஹம்சா என்ற இரு உதவி அதிகாரிகள் மூலம் இவர்களுக்குப் பயிற்சிகளை அளித்தார். அந்த இருவரும் பாகிஸ்தான் ராணுவச் சீருடையும் அணிவார்கள். ஹம்சா சீருடை அல்லாத சாதாரண உடைதான் அணிந்திருந்தார். ஆனால், முகாமில் இருந்தவர்கள் அவருக்கு அதிக மரியாதை தருவார்கள்.

ஜீஷன் கமார், ஒசாமா இருவருக்கும் வெடிகுண்டுகளைத் தயாரிக்கவும் வெடிகுண்டு என்று தெரியாதபடிக்கு வெவ்வேறு வடிவங்களில் அவற்றைத் தயாரிக்கவும் கற்றுத்தந்தனர். அத்துடன் வெடிமருந்துகள், வெடித்திரிகள் போன்றவற்றின் மூலம் எப்படி பெரிய கட்டிடங்களுக்குக் கூட நெருப்பு வைத்து எரிப்பது என்றும் பயிற்சியளித்தனர். சிறிய ரக துப்பாக்கிகள் முதல் ஏ.கே. 47 தானியங்கி துப்பாக்கிகள்வரை அனைத்தையும் கையாளவும் பயிற்சி அளித்தனர்.”

என்பவை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஜான் முகம்மது ஷேக் (47), டெல்லி ஜாமியாநகரைச் சேர்ந்த ஒசாமா என்ற சமி (22), உத்தரப்பிரதேசம் ராய்பரேலியைச் சேர்ந்த மூல்சந்த் என்கிற லாலா (47), உத்தர பிரதேசத்தின் பாஹ்ரைச் என்ற ஊரைச் சேர்ந்த முகம்மது அபு பக்கர் (23) ஆகியோரும் இவர்களுடன் கைதாகி இப்போது டெல்லி போலீஸாரின் காவலில் இருக்கின்றனர். ஜீஷன் கமார் தவிர முகம்மது ஆமிர் ஜாவேத் என்பவரும் பிடிபட்டுள்ளார்.

டெல்லியில் பிடிபட்டவர்களிடம் இருந்து நவீனரக வெளிநாட்டு ஆயுதங்கள், இத்தாலியில் தயாரான பிஸ்டல்கள், குண்டுகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

x