மியான்மரில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் ராணுவத்துக்கும் சுதந்திரம் வேண்டும் என்று போராடும் மக்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை அதிகமாகியிருக்கிறது.
இதனால் கடந்த சில நாட்களில் மிசோரம் மாநிலத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மியான்மர் அகதிகள் வரத் தொடங்கியுள்ளனர். கிராமப் பெரியவர்கள் அவர்களைத் தங்களுடைய ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் முகாம்கள் அமைத்து தங்க வைத்து உணவு, உடை, மருத்துவ உதவிகள் செய்து காக்கின்றனர்.
மிசோரத்துக்கும் மியான்மருக்கும் இடையில் 510 கிலோ மீட்டர் நீள நில எல்லை இருக்கிறது. அத்துடன் குடியுரிமையில் மியான்மர்களாக இருந்தாலும், மிசோரத்தை ஒட்டிய பகுதியில் வசிப்பவர்கள் அவர்களுடைய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களே. இப்போதைக்குப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர். சம்பாய், நத்தியால், செர்சிப், சைதுவால், சியாஹா, லாங்தலாய் ஆகிய மிசோரம் மாவட்டங்களுக்கு அகதிகள் வருவது தொடர்கிறது. கடந்த மார்ச் தொடங்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்தனர். இப்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மியான்மர் அகதிகள் மிசோரத்தில் தங்கியுள்ளனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி வந்தவுடனேயே அங்கிருந்து அகதிகள் இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக எல்லையில் காவலை வலுப்படுத்தியது இந்திய அரசு. ஆனால், மிசோரம் முதலமைச்சர் உள்பட பல பழங்குடித் தலைவர்கள் இதை ஏற்கவில்லை. “அவர்கள் அகதிகள் மட்டுமல்ல, எங்களுடைய பழங்குடி சகோதரர்கள், எனவே அரசின் கொள்கை முடிவுகள் எங்களைக் கட்டுப்படுத்தாது, நாங்கள் அவர்களை அரவணைப்போம்” என்று அறிவித்துவிட்டனர்.