அமெரிக்கா முதல் ஆப்கன் வரை


தாக்குதலுக்குள்ளான வர்த்தக மைய கோபுரங்கள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிவிட்டதை அடுத்து, புதிய அரசு பொறுப்பேற்க செப்டம்பர் 11-ம் தேதியை தாலிபான்கள் அறிவித்தது உலக நாடுகளைத் துணுக்குற வைத்திருக்கிறது. காரணம், 2001-ல் இதே செப்டம்பர் 11 அன்று பயங்கரவாதிகளின் தாக்குதலில் நிலைகுலைந்த அமெரிக்கா, அதிரடியாய் மேற்கொண்ட போர்ப் பிரகடனத்தின் அங்கமாகவே ஆப்கனில் நிலைகொண்டது. இந்த இரண்டு ‘செப்டம்பர் 11’-களுக்கும் இடையிலான இருபது வருடங்களில் அமெரிக்காவும், அதன் சாட்சியாக உலக நாடுகளும் பெற்றதும் தவறவிட்டதுமான படிப்பினைகள் ஏராளம்.

அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்று கழுகு. உலகின் அனைத்து நாடுகளையும் கழுகுப் பார்வையில் கண்காணிப்பதும், மத்தியஸ்தம் செய்வதும், அவசியமெனில் பாய்ந்து அடிப்பதுமாய் அமெரிக்காவின் அடாவடிகள் அநேகம். ஆனால் 2001 செப்டம்பர் 11 அன்று, மிகப்பெரும் எந்திரக் கழுகுகளாக வானிலிருந்து தாக்கிய விமானங்களால் அமெரிக்காவின் பெரியண்ணன் பிம்பம் அடிபட்டுப்போனது. அதை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியில், பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஆப்கானிஸ்தானில் அடியெடுத்த அமெரிக்கப் படை அங்கிருந்தும் தற்போது கவிழ்ந்த தலையுடன் நாடு திரும்பியிருக்கிறது.

நிலைகுலைந்த வல்லரசு

அமெரிக்காவின் வெவ்வேறு விமான நிலையங்களிலிருந்து 2001, செப்டம்பர் 11 அன்று காலை கிளம்பிய 4 விமானங்கள் ஆகாயத்துக்குச் சீறிய அரை மணி நேரத்தில் பயங்கரவாதிகளால் பேனாக்கத்தி முனையில் கடத்தப்பட்டன. அவற்றில் 2 விமானங்கள் உலக வர்த்தக மையத்தின் வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களைத் தாக்க, 3-வது விமானம் ராணுவத் தலைமையகமான பென்டகனைத் தாக்கியது. வெள்ளை மாளிகை நோக்கி பறந்த 4-வது விமானம் மர்மமான முறையில் பென்சில்வேனியா வனாந்தரத்தில் விழுந்து நொறுங்கியது. அமெரிக்காவின் பெருமைக்குரிய அடையாளங்களான இந்தக் கட்டிடங்கள் குறிவைக்கப்பட்டதன் பின்னணியில், உலகை நடுங்கவைக்கும் பயங்கரவாதிகள் இருந்தனர். அவர்களை வளர்த்துவிட்டதன் பின்னணியில் வழக்கம்போல அமெரிக்காவே இருந்தது.

ஒசாமா பின் லேடன்

ஒசாமாவுக்கு உதவி

பனிப்போர் காலத்தில், தனது மூக்குக்குக்கீழே இருந்த கியூபா என்ற குட்டி கம்யூனிஸ தேசத்தால் அமெரிக்கா அடிக்கடி உறக்கம் இழந்தது. பரம எதிரியான சோவியத் ஒன்றியத்தின் போர் விமானங்கள் கியூபாவில் குவிக்கப்படுவது அதிகரிக்கவே, பதிலடியாக சோவியத்தின் மூக்கருகே பதம் பார்க்க அமெரிக்கா முடிவு செய்தது. தனக்குக் கியூபா போல சோவியத்துக்குக் குடைச்சல் தர ஆப்கானிஸ்தானைத் தேர்ந்தெடுத்தது. ரஷ்யாவின் பிடியிலிருந்து தங்களை விடுவிக்கப் போராடிக்கொண்டிருந்த ஆப்கன் பழங்குடிப் போராளிகளுக்கு, அவர்களே எதிர்பாராத வகையில் ஆயுதங்களை அமெரிக்கா அள்ளித் தந்தது.

சவுதியிலிருந்து சக இஸ்லாமிய தேசத்தின் விடுதலைக்காக ஆப்கானிஸ்தானில் மையங்கொண்ட போராளிக் குழு ஒன்றும் அப்படிப் பயனடைந்தது. ஆப்கனில் போர் முடிந்த பிறகு, அந்த ஆயுதக் குவியலை வைத்து என்ன செய்வது என்று அவர்கள் யோசித்தார்கள். உலகமெங்கும் இஸ்லாமிய மண்ணில் எங்கே அபயக்குரல் எழுந்தாலும் அங்கே ஆஜராவது என்று அவர்கள் முடிவு செய்தனர். அப்படியான குழுவின் முகமாக எழுந்தவர் ஒசாமா.

வில்லங்க அல்-கொய்தா

மிகப்பெரும் தொழிலதிபர் குடும்பம், மெத்தப் படித்தவர், சவுதி மன்னரின் குடும்ப நண்பர் என மெச்சும்படியான அடையாளங்களுடன் வசீகரித்தவர் ஒசாமா. அவரைப் பின்பற்றி உலகெங்கிருந்தும் இளைஞர்கள் ஆப்கனில் குவிந்தனர். அப்போது ஒசாமா தனி அமைப்பு கண்டிருக்கவில்லை. மார்க்க அறிஞரும் ஒசாமாவின் முன்னோடியுமான அப்துல்லா அஸம் என்பவரின் ‘ஆப்கன் சர்வீஸ் பீரோ’ என்ற குடையின்கீழ் ஒசாமாவும் அவரையொற்றிய இளைஞர்களும் இணைந்திருந்தனர். ஆயுத உதவிகளை கை நீட்டி பெற்றபோதும், அமெரிக்காவின் உண்மை சொரூபம் அறிந்தவராக அதன் பின்னர் ஒசாமா விலகியே இருந்தார். ஒருகட்டத்தில், அமெரிக்கா சொல்படி ஆடுவதாக அப்துல்லா அஸமைப் பாகிஸ்தான் கார் குண்டு தாக்குதலில் காலி செய்தார். புதிய தொடக்கத்துக்காக அமைப்பின் பெயரையும் ‘அல்-கொய்தா’ என்று மாற்றினார். ‘அல்-காயிதா’, ‘அல்-கய்தா’ என்று வெவ்வேறு விதமாக இது உச்சரிக்கப்படுகிறது

ஒசாமாவின் ஒத்திகைகள்

இதர அடிப்படைவாதிகள் போலவே, ஷரியத் சட்டப்படியான கலிஃபாக்களின் ஆட்சியே ஒசாமாவின் நோக்கமாகவும் இருந்தது. கூடவே, அரபு மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் கொட்டத்தை அடக்கவும் அவர் துடித்துக்கொண்டிருந்தார். அமெரிக்காவிடம் ஆரம்பித்து அதற்கு எதிராகவே திரும்பிய ஒசாமாவை, ஆரம்பத்தில் அமெரிக்க உளவாளிகள் பொருட்படுத்தவே இல்லை. அடிப்படைவாத அமைப்புகளின் புரவலராகவே அவரை அலட்சியப்படுத்தினர். உலகெங்கிலும் இருந்து இஸ்லாமிய இளைஞர்கள் சேர்ந்துகொண்டிருந்தனர். சூடானில் தங்கியிருந்தபோது, அமெரிக்காவின் அஸ்திவாரத்தைப் பதம்பார்க்கும் திட்டங்களைத் தீட்டி, அவற்றில் சிலவற்றை அரங்கேற்றமும் செய்தார் ஒசாமா.

ஏடன் துறைமுகத்தில் அமெரிக்கர்களைக் குறிவைத்து 2 உணவு விடுதிகள் மீதான தாக்குதல் (1992), சோமாலியாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் (1993), சவுதியின் ரியாத் அமெரிக்க ராணுவ முகாம் மீதான் தாக்குதல் (1995 ), தான்சானியா மற்றும் கென்யாவின் அமெரிக்கத் தூதரகங்கள் மீதான தாக்குதல் (1998), 2 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீதான வெடிமருந்துப் படகு தாக்குதல் என அமெரிக்காவைக் குறிவைத்தே அடுத்தடுத்த தாக்குதல்களை ஒசாமா தொடுத்துக்கொண்டிருந்தார். அதிலும் அமெரிக்க வர்த்தக மையத்தின் தரையடி தளத்தில் குண்டு வைத்து (1993), பின்னாளைய பெரும் தாக்குதலுக்கு ஒத்திகையாய் சில அமெரிக்கர்களை கொன்றபோதும் புகழ்பெற்ற அமெரிக்க உளவாளிகள் ஒசாமாவைக் கோட்டைவிட்டிருந்தனர். அதற்குக் காரணமாக அல்-கொய்தா அமைப்பின் இயங்கியலும் இருந்தது. பிற இயக்கங்களின் உறுப்பினர்களையும், ஸ்லீப்பர் செல்களையும் தேவைக்கேற்ப சுவீகரித்துக்கொள்ளும் வல்லமையை வலைப்பின்னலில் வளர்த்திருந்தார் ஒசாமா.

பென்டகன் மீதான தாக்குதல்

சந்தேகமும் சதிக்கோட்பாடும்

ஒசாமா மீதும் அவரது அமைப்பு மீதும் அமெரிக்க உளவு அமைப்புகளின் கண்காணிப்பு படராததே செப்.11 தாக்குதலுக்கு உதவிகரமானது. தங்கள் பெயர், முகவரி, வங்கி பரிவர்த்தனைகள் எதையும் மறைக்காது அமெரிக்காவில் புழங்கிய தீவிரவாதிகளை செப்.11 தாக்குதலுக்குப் பிறகே அடையாளம் கண்டனர் அமெரிக்க உளவாளிகள். சுமார் தலா பத்தாயிரம் காலன் எரிபொருளைச் சுமந்த விமானங்களால், உலகம் அதுவரை சந்தித்திராத பயங்கரவாதத் தாக்குதல் உத்தியை நிகழ்த்தவும் அமெரிக்காவின் மெத்தனமே காரணமானது. இந்தக் குற்றச்சாட்டுகளே, மேற்படி தாக்குதல்களை அமெரிக்காவே முன்னின்று நடத்தியதாக அமெரிக்கர்களே சந்தேகிக்கவும் வழிசெய்தது.

ஏலியன்கள் பிடியில் வல்லரசுகள், இலுமினாட்டிகளே உலகை இயக்குகிறார்கள்... எனப் பல்வேறு சதிக்கோட்பாடுகளைத் தீவிரமாக நம்புவோர் எல்லா நாடுகளிலும் நிறைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில், செப்.11 தாக்குதலும் பயங்கரவாதிகளின் போர்வையில் அமெரிக்க அரசே முன்னின்று நடத்தியது என்றும், பயங்கரவாதிகளின் திட்டத்தை அறிந்திருந்தும் அதைத் தடுக்காது உள்நோக்கத்துடன் அரசு வேடிக்கை பார்த்தது என்றும் நம்புவோர் அமெரிக்காவில் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு உரம் சேர்ப்பதுபோல, அமெரிக்க அரசின் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகளும் ஒவ்வொரு செப்.11 அன்றும் புதிதுபுதிதாய் வெளிப்பட்டு வருகின்றன.

முன்சொன்னது போல, சொந்த அடையாளத்துடன் பல வருடங்கள் அமெரிக்காவில் தங்கி விமானப் பயிற்சி பெற்ற இளைஞர்களை அவர்களின் வங்கிப் பரிவர்த்தனைகளை கண்டுகொள்ளாது விட்டது, தாக்குதல் நடந்த விதமும் அதன் சேதங்களும், 4-வது விமானம் நொறுங்கியதன் பின்னணி... இப்படி அதிர்ச்சியும் சுவாரசியமும் கலந்த சதிக்கோட்பாடுகள், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய ஆவணப்படங்களாக, புத்தகங்களாக வெளியாகி திடுக்கிட வைக்கின்றன.

வர்த்தக மையத் தாக்குதல் 2

அடையாளம் மாறிய பாதுகாப்பு அரண்கள்

அமெரிக்கா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலும் விமானப் பாதுகாப்பு, பயங்கரவாதிகள் கண்காணிப்பு, உளவுத் தகவல்கள் பரிமாற்றம், கட்டிடங்கள் மற்றும் விமானங்களின் கட்டுமானம் எனப் பல்வேறு விஷயங்களில் ஏராளமான மாற்றங்களுக்கு செப்.11 தாக்குதல்கள் காரணமாகின. ‘போயிங் 707’ விமானம் மோதினாலும் நிலைகுலையாது என்று கட்டுமானத்தில் உறுதியளிக்கப்பட்ட வர்த்தக மைய கோபுரங்கள், சில மணி நேரங்களில் சாம்பலான விதம், கட்டுமானத் துறையை அதிரவைத்தது. அத்துடன் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், உயிர்காக்கும் ஏற்பாடுகளில் வளர்ந்த தேசமான அமெரிக்காவே தடுமாறியதும் அதற்குப் பலியாக மக்களைப் பறிகொடுத்ததும் உலகுக்கே பாடமாகியிருக்கின்றன. விமானத்தைக் கடத்தி அதையே ஏவுகணைபோல ஆயுதமாக்கும் உத்தி அதற்கு முன்புவரை உலகமே யோசித்திராதது. விமானக் கடத்தலைத் தடுக்கவும், விமானப் பயணிகளைத் தீவிரமாகச் சோதனையிடவும் அதன் பின்னரே நவீன சாதனங்கள், வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

உருமாறும் பயங்கரவாதிகள்

அடிபட்ட விலங்காய் ஆப்கனில் புகுந்து வேட்டையாடிய அமெரிக்கா, பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமாவையும் கொன்று கொண்டாடியது. அல்-கொய்தாவை அழித்துவிட்டோம் என்று இறுமாந்திருந்த அமெரிக்காவுக்கு, சிரியாவில் அந்த அமைப்பிலிருந்து பிரிந்தவர்களால் களம் கண்ட ஐ.எஸ் அமைப்பு தலைவலியானது. பிற்பாடு அதையும் ஒழித்துவிட்டோம் என்றபோது, ஐ.எஸ் அமைப்பின் பிளவுற்ற இன்னொரு குழுவின் தாக்குதலில் ஆப்கனிலிருந்து விடைபெறத் தயாராக இருந்த அமெரிக்க வீரர்களைப் பறிகொடுத்தது.

அடிப்படைவாத அமைப்புகள் வெட்ட வெட்ட கிளைப்பதன் ரகசியம், அமெரிக்காவுக்கு இன்றுவரை பிடிபடவே இல்லை. அடிப்படைவாத அமைப்புகளைப் பிணைத்திருக்கும் ’பேயா’ (bayah) எனப்படும் விசுவாச உறுதிமொழியின் ஆழமும் விளங்கியபாடில்லை. அதன் கொடூர விளைவுகளை எதிர்கொள்ளும் அப்பாவி மக்களுக்கு, பயங்கரவாதத்தின் வலி மட்டும் நன்றாகவே தெரிகிறது!

x