காபூல்: காபூல் நகரில் உள்ள நார்வே நாட்டுத் தூதரகத்தை புதன்கிழமை கைப்பற்றிய தாலிபான்கள், அங்கே இருந்த ஒயின் பாட்டில்களையும் சிறுவர்கள் படிப்பதற்கான நூல்களையும் அழிக்குமாறு உத்தரவிட்டனர். ஆகஸ்ட் 15-ல் நாடு தாலிபான்களின் கைகளுக்குச் சென்ற உடனேயே நார்வே, டென்மார்க் நாட்டுத் தூதர்கள் தங்களுடைய அலுவலகங்களைப் பூட்டிவிட்டு வெளியேறிவிட்டனர்.
இஸ்லாமிய மத நெறிப்படி ஆட்சி நடைபெறும் என்று அறிவித்த தாலிபான்கள், மதுப்பழக்கம் கூடாது என்பதால் தூதரகத்தில் இருந்த ஒயின் பாட்டில்களை உடைத்து அழித்தனர். சிறார்கள் படிப்பதற்கான புத்தகங்களையும் ஏற்க முடியாது என்று கொளுத்தவும் கிழிக்கவும் உத்தரவிட்டனர். தூதரகத்தை சோதனையிட்டு, அழிக்க வேண்டியவற்றை அழித்த பிறகு உரியவர்களிடமே திரும்பக் கொடுத்துவிடுவோம் என்றனர்.
இதையெல்லாம் பார்க்கையில், தாலிபான்கள் இந்த முறை மென்மையாக நடப்பார்கள், அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தருவார்கள் என்கிற நம்பிக்கைகள் பொய்த்து வருகின்றன. பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது, கல்வி பயிலக் கூடாது என்பதை கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்துகின்றனர். பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்விக் கூடங்களில் இருபாலரும் படிக்கும் வகுப்புகளில் பெண்களை ஒரு பக்கமாக அமரவைத்து, நடுவில் திரையிடுமாறு கட்டளையிட்டுள்ளனர். விளையாட்டுகளில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டனர். தாலிபான்களிடம் முன் அனுமதி பெறாமல், நாட்டில் யாரும் ஆர்ப்பாட்டம் போன்ற எதிர்ப்பு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.