ஆப்கனில் அமைந்தது புதிய அரசு


1999-ல் அப்போதைய பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்கும் முகமது ஹசன் அகுந்த்

ஆப்கானிஸ்தானின் இடைக்காலப் பிரதமராகத் தாலிபான் அமைப்பின் தலைமை கவுன்சிலின் தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தாலிபான் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான அப்துல் கனி பராதர், ஆப்கனின் துணைப் பிரதமராகிறார்.

ஆகஸ்ட் 15-ல் ஆப்கன் தலைநகர் காபூலைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தாலிபான்கள் விரைவில் ஆட்சியமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பல்வேறு குழுக்களாக இயங்கிவரும் தாலிபான்களிடையே இதுதொடர்பாக ஒருமித்த கருத்து விரைவில் எட்டப்படவில்லை. இந்நிலையில், ஆப்கனின் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை, தாலிபான்களின் செய்தித் தொடர்பாளரான ஜபியுல்லா முஜாஹத் தலைநகர் காபூலில் இன்று (செப்டம்பர் 7) வெளியிட்டார்.

அதன்படி, பரவலாக அறியப்படாத தாலிபான் தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த் ஆப்கனின் இடைக்காலப் பிரதமராகிறார். இவர் முந்தைய தாலிபான் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். தாலிபான்களின் போர்ப்படைத் தலைவர் என்பதைக் காட்டிலும் மதரீதியிலான தலைவராகவே பெரிதும் அறியப்பட்டவர். 2001-ல், பாமியான் புத்தர் சிலையைத் தகர்க்க உத்தரவிட்டது இவர்தான்.

துணைப் பிரதமராகும் அப்துல் கனி பராதர், முல்லா உமருடன் இணைந்து தாலிபான் அமைப்பை உருவாக்கியவர். மிக முக்கியமான தாலிபான் தலைவராகக் கருதப்படுபவர். ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்.

தாலிபான் நிறுவனத் தலைவராக இருந்த முல்லா உமரின் மகன் முல்லா யாகூப், ஆப்கனின் பாதுகாப்புத் துறை அமைச்சராகிறார். உள் துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்துல் சலாம் ஹனாஃபி 2-வது துணைப் பிரதமராகவும், அமீர் கான் முத்தகி வெளியுறவுத் துறை அமைச்சராகவும், ஹிதயத்துல்லா பத்ரி நிதியமைச்சராகவும், தின் முகமது பொருளாதார அமைச்சராகவும், முகமது இத்ரிஸ் ஆப்கன் மத்திய வங்கியின் இடைக்கால கவர்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். அமைச்சரவையில் வேறு யார் யாருக்கு இடம் என்பது விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் காபூலுக்குச் சென்றிருந்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் பயஸ் ஹமீது அளித்த ஆலோசனையின் பேரில், இம்முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தாலிபான்கள் மறுத்திருந்தாலும், புதிய அரசைத் தேர்ந்தெடுத்ததில் பயஸ் ஹமீதுவின் பங்களிப்பு முக்கியமானது என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

x