பாகிஸ்தானுக்கு எதிராகக் காபூலில் ஆர்ப்பாட்டம்


பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிடும் ஆப்கன் பெண்

ஆப்கானிஸ்தானின் உள்விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று வலியுறுத்தி, அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இன்று (செப்டம்பர் 7) ஆர்ப்பாட்டம் நடந்தது. பாகிஸ்தானைக் கண்டிக்கும் முழக்கங்களுடன் சுமார் 70 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இவர்களில் அதிகம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கனில் அமையவிருக்கும் இடைக்கால அரசு அனைத்து இனங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் என்று தாலிபான்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் தலைமை நிர்வாகக் குழுவை அவர்களால் இறுதி செய்ய முடியவில்லை. பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தாலிபான்களுக்குக் கடுமையான எதிர்ப்பு நிலவியதால், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் பயஸ் ஹமீது சில நாட்களுக்கு முன்னால் காபூலுக்கு விரைந்தார். தாலிபான்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார். இந்நிலையில்தான் பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஆப்கானியர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள தாலிபான்கள் வானில் துப்பாக்கியால் சுட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரித்தனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கில் உள்ள மஸார்-இ-ஷெரீஃப் என்ற நகரில், தங்களுடைய உரிமைகளைப் பறிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மகளிர் பலர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துவிட்டனர் என்பது உறுதியான பிறகும் ஆப்கானியர்கள், அதிலும் குறிப்பாகப் பெண்கள் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யத் தயங்கவில்லை.

‘புதிய ஆப்கன் அரசுக்கு எதிராக எவராவது கிளர்ந்து எழுந்தால் இனி கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும்’ என்று ஜபியுல்லா முஜாஹித் என்ற தாலிபான் தலைவர் எச்சரித்துள்ளார். அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் என்றாலும் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்காது என்றே தெரிகிறது. போரினால் பாதிப்படைந்துள்ள ஆப்கானிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. போரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியிருக்கிறது. போரினால் இடம்பெயர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆகியோரைக் காக்க வேண்டிய மிகப் பெரிய நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது. தாலிபான்கள் அதையெல்லாம் நிறைவேற்றுவார்களா என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறி!

x