ஆப்கானிஸ்தானின் வட கிழக்குப் பகுதியில் உள்ள பாஞ்சஷீர் மாநிலத்தில் தாலிபான்களுக்கும், ‘தேசிய எதிர்ப்பு முன்னணி’ போராளிகளுக்கும் நடந்த மோதல்களில் 600-க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர் .
முன்னதாக, பாஞ்சஷீரைக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்து தலைநகர் காபூலில் தாலிபான்கள் வானத்தை நோக்கி சுட்ட வெற்றிக்களிப்பு சம்பவங்களில் 17 பேர் இறந்ததாக நேற்று செய்தி வெளியானது. அது உண்மையல்ல என்று இப்போது தெரியவருகிறது.
ஆப்கனைக் கைக்குள் கொண்டு வந்துவிட்டாலும், பாஞ்சஷீர் மாநிலத் தலைநகரம் பசாரக் இன்னும் தாலிபான்கள் வசமாகவில்லை. தலைநகரைச் சுற்றியுள்ள பாதைகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அத்துடன் குன்றுகளிலும் குகைகளிலுமிருந்து பாஞ்சஷீர் மாநில மக்கள் ஆயுதங்களுடன் தீவிரமாகப் போரிட்டு வருகின்றனர்.
அங்கு அகமது மசூத் தலைமையிலான தேசிய எதிர்ப்பு முன்னணி, தாலிபான்களுக்கு எதிராக தீவிரமாகச் செயல்படுகிறது. அகமது மசூத், ஆப்கன் கெரில்லா படைகளுக்கு முன்னர் தலைமை தாங்கிய அகமது ஷா மசூதின் புதல்வர். முன்னர் நாட்டின் துணை அதிபராகப் பதவி வகித்த அம்ருல்லா சாலேவும் எதிர்ப்பு முன்னணி வீரர்களுடன் சேர்ந்து, தாலிபான்களை எதிர்ப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இவர் ஆப்கன் இடைக்கால அரசின் அதிபராக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். “எங்கள் மாநிலத்தின் மீது தாலிபான்கள் படையெடுத்துள்ளனர், நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது, நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம், போரிடுவோம்” என்று தெரிவித்திருக்கிறார் அம்ருல்லா சாலே.