ஆப்கனிலிருந்து அமெரிக்கா தனது ராணுவத்தை விலக்கிக்கொண்டுவிட்டாலும், மறுபக்கம் வளைகுடா நாடுகளில் தனது பிடியை அமெரிக்கா இன்னமும் விடவில்லை. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிடு ஆஸ்டின், வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது இதை உறுதிப்படுத்துகிறது.
சவுதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளுக்கு நாளை (செப்டம்பர் 6) செல்லும் லாயிடு ஆஸ்டின், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட பின்னர், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தலைவர் வளைகுடா நாடுகளுக்குச் செல்வது இதுவே முதல் முறை!
அமெரிக்க ராணுவம் வெளியேறிவிட்டாலும், அமெரிக்க மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இன்னும் ஆப்கனில் இருக்கிறார்கள். அவர்களைப் பத்திரமாக வெளியேற்றும் பணிகளை லாயிடு ஆஸ்டின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ஆகியோர் கண்காணித்துவருகிறார்கள். ஆப்கனிலிருந்து அமெரிக்கர்கள், ஆப்கானியர்கள் என ஆயிரக்கணக்கானோர் வெளியேறுவதற்கு உதவிய கத்தார் நாட்டின் தலைவர்களைச் சந்தித்து நன்றிகூற ஆன்டனி பிளிங்கனும் இன்று (செப்டம்பர் 5) கத்தாருக்குச் செல்லவிருக்கிறார்.
தாலிபான்களின் பிடியிலிருந்து வெளியேற விரும்பும் ஆப்கானியர்களை அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. எனினும், அதில் ஏக கெடுபிடிகளை அமெரிக்கா கடைப்பிடிக்கிறது.
“ஆப்கனில் போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், புதிய அத்தியாயத்துக்குள் நுழைகிறோம். ஆப்கனிலிருந்து விமானம் மூலம் வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளை வளைகுடா நாடுகளிலும் ஐரோப்பாவிலும் துரிதமாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்” என லாய்டு ஆஸ்டின் கூறியிருக்கிறார்.
தங்கள் எதிர்காலம் என்னவாகும் எனும் கேள்விகளுடன் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் தோஹாவில் காத்திருக்கிறார்கள்.
ஆப்கனிலிருந்து மக்களை வெளியேற்றும் பணியில் கத்தார் நாட்டின் பங்கு முக்கியமானது. அந்நாட்டின் தலைநகர் தோஹாவில் இருக்கும் அல்-உதீத் விமானப் படைத் தளம் , மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்கத் தளங்களில் மிகப் பெரியது. காபூலிலிருந்து கிளம்பும் விமானங்கள் அங்குதான் தரையிறங்குகின்றன. அங்கிருந்து, ஆப்கன் அகதிகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதா என்பதைத் தீர்மானிக்க பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில், தங்கள் எதிர்காலம் என்னவாகும் எனும் கேள்விகளுடன் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் அங்கு காத்திருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், அமெரிக்க அமைச்சர்களின் வளைகுடா வருகை, ஆப்கானியர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்குமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது!