முதல் முன்னுரிமையே மூச்சு முட்டுதே!


தாலிபான்களின் தலையெடுப்பால் ஆப்கனில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்ற அச்சம் இயல்பாகவே ஏற்பட்டது. அப்படியெல்லாம் இருக்காது என மறுத்த தாலிபான்கள், “பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறிக்க மாட்டோம்” என்று உறுதி அளித்தனர். அந்த உறுதியெல்லாம் இப்போது காற்றில் பறக்கிறது.

எந்த இயக்கமாக இருந்தாலும் காலம் செல்லச்செல்ல அவர்களும் திருந்துவார்கள் என்றே நினைத்து ஆறுதல் அடைந்தது சர்வதேச சமூகம். ஆனால், வேதாளம் முருங்கை மரம் மீது மீண்டும் ஏறிவிட்டது. ஆபாச வீடியோ காட்சிகளை ஒன்றுவிடாமல் பார்க்கும் வேலையை, தாலிபான்களில் ஒரு பிரிவு தொடங்கியிருக்கிறது. எதற்காம்... அவற்றில் இடம்பெற்றுள்ள ஆப்கானியப் பெண்களை அடையாளம் கண்டு, மதச் சட்டப்படி அவர்களைத் தண்டிப்பதற்குத் தானாம். தலையை வெட்டியோ, கல்லெறிந்தோ பொது இடங்களில் அவர்களைக் கொல்வார்களாம். பிடிபடும் பெண்கள் முதலில் வேலையடிமைகளாக வைத்துக்கொள்ளப்படுவார்கள், கூட்டு வல்லுறவுக்கும் உட்படுத்தப்படுவார்கள் என்று தாலிபான் வட்டாரங்களே தெரிவிக்கின்றன.

பெண்கள் படிப்பதற்குத் தடையில்லை என்று அறிவித்த தாலிபான்கள், இருபாலரும் சேர்ந்து படிப்பதை முதல் கட்டமாகத் தடுத்திருக்கிறார்கள். 15 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் உள்ள திருமணமாகாத பெண்கள், கணவனை இழந்த பெண்கள் ஆகியோரின் பட்டியலைத் தருமாறு உள்ளூர் மத குருக்களிடம் கேட்டுள்ளனர். தாலிபான் போராளிகள் மணந்துகொள்வதற்காக இந்தப் பட்டியல். ஆப்கானிஸ்தானில் உள்ள நிறுவனங்கள், தங்களுடைய பெண் ஊழியர்களை, இனி வேலைக்கு வர வேண்டாம் என்று திருப்பி அனுப்பத் தொடங்கிவிட்டன. இதையெல்லாம் பார்க்கும்போது, 1996 முதல் 2001 வரையில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆண்ட காலம் நினைவுக்கு வர ஆரம்பித்துவிட்டது என்றே பலரும் கருதுகின்றனர்.

x