ஆப்கனை காலிசெய்த அமெரிக்கா!


ஐஎஸ் கோராசான் அமைப்பினர்

அமெரிக்க ராணுவத்தின் கடைசி வீரர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட சூழலில், ஆப்கானியர்களின் எதிர்காலம் இனி என்னவாகும் எனும் அச்சம் உச்சத்தை அடைந்திருக்கிறது. அமெரிக்கா ஒரு நாட்டில் கால் பதித்து சில பல ஆண்டுகள் கழித்து வெளியேறும்போது அந்நாடு உருக்குலைந்து கிடக்கும் என்பதும், உள்நாட்டுப் போரின் உக்கிரம் அதிகரித்திருக்கும் என்பதும் வரலாற்று ரீதியில் பல முறை நிரூபணமாகியிருக்கிறது. அந்தப் பரிதாபப் பட்டியலில் ஆப்கனும் சேர்ந்திருக்கிறது.

ஆகஸ்ட் 30-ல் காபூல் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய விமானத்தில் அமெரிக்க விமானப் படை கமாண்டர் க்றிஸ் டொனாஹியூ கடைசி அமெரிக்க வீரராக ஏறிச் சென்றிருக்கிறார். அவ்விமானத்தின் மூலம் ஆப்கனுக்கான அமெரிக்கத் தூதர் ரோஸ் வில்சனும் ஆப்கனிலிருந்து கிளம்பியிருக்கிறார். அமெரிக்கப் படைகள் வெளியேற ஆகஸ்ட் 31-ம் தேதிதான் இறுதி நாள் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் கடைசி வெளியேற்றமும் நடந்தேறிவிட்டது.

யுத்தம் தொடரும்

ஆப்கனில் ஷரியா சட்டத்துக்குட்பட்டு பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சுதந்திரமாக நடத்தப்படுவார்கள் என சர்வதேச சமூகத்துக்குத் தாலிபான்கள் சொல்லிக்கொண்டாலும், ஆப்கனில் நடக்கும் காட்சிகள் அதற்கு நேர்மாறான சித்திரத்தைத்தான் காட்டுகின்றன. மறுபுறம் தாலிபான்களுக்கே பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறார்கள் ஐஎஸ் பயங்கரவாதிகள். காபூல் விமான நிலையத்தில் ‘ஐஎஸ் கோராசான்’ அமைப்பு நிகழ்த்திய குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த உலகத்தையும் அதிரவைத்திருக்கிறது. பதிலடியாக ஐஎஸ் அமைப்பினரின் இருப்பிடத்தைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இனி துப்பாக்கி, வெடிகுண்டு சத்தங்கள் ஆப்கனை அதிரவைக்கும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. அதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்கள்தான் என்பது மிகப் பெரிய துயரம்.

ஐஎஸ் கோராசானின் உதயம்

1990-களின் இறுதியில் இராக்கில் உருவான ஐஎஸ் அமைப்பு, பின்னர் மளமளவென வளர்ந்து சிரியா உள்ளிட்ட நாடுகளில் நிலைகொண்டு பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது. 2014 ஜூன் மாதம், இராக்கின் மோசூல் நகரத்தில் உள்ள கிராண்ட் அல் – நூரியில் இருந்தபடி, இஸ்லாம் அரசின் தலைவராக (காலிஃபேட்) தன்னை அறிவித்துக்கொண்டார் அல் பாக்தாதி. அந்தக் காலகட்டத்தில் சிரியா, இராக்கின் சில பகுதிகளை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ (இஸ்லாமிக் ஸ்டேட் - ஐஎஸ்) என்ற பெயரில் கிட்டத்தட்ட ஒரு ராஜ்ஜியத்தையே அமைத்திருந்தது. ஒரு வகையில், ஐஎஸ் அமைப்பின் ரிஷிமூலம் அல்கொய்தாதான் என்றாலும், “பயங்கரவாதத்தின் எல்லைகளையே மீறி பைத்தியக்காரத்தனத்துடன் செயல்படுகிறது இந்த அமைப்பு” என்று அல்-கொய்தா தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரியே கடுமையாகக் குற்றம்சாட்டும் வகையில் அட்டூழியங்களைச் செய்தனர் ஐஎஸ் பயங்கரவாதிகள். ஐரோப்பிய நாடுகளிலும் தங்கள் கைவரிசையை அவர்கள் காட்டினர். அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர்களையும் குடிமக்களையும் கழுத்தறுத்துக் கொன்று உலகையே அதிரவைத்தனர்.

இந்நிலையில், 2015-ல் ஆப்கனின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஐஎஸ்-கோராசான் அமைப்பில் இணையத் தொடங்கினர். குறிப்பாக, சிரியாவிலும் இராக்கிலும் அமெரிக்கப் படைகள், குர்து இன வீரர்களின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆப்கனில் நிலைகொள்ளத் தொடங்கிய ஐஎஸ் அமைப்பில் ஏராளமான ஆப்கானிய இளைஞர்கள் சேர்ந்தார்கள். இன்று கிழக்குப் பகுதியில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் இந்த அமைப்பினர் வலுப்பெற்றிருக்கிறார்கள். தற்போது பாகிஸ்தான் எல்லைகளில் குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் நடைபெறும் பகுதிகளில் ஐஎஸ் அமைப்பினர் வலுவாக இருக்கிறார்கள்.

அழிவுசக்தி

ஆப்கனில் தாலிபான்களுக்குப் போட்டியாக, ஐஎஸ் கோராசான் அமைப்பினர் பல கொடூரத் தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கின்றனர். 2016-ல், தங்கள் பகுதிக்கு மின்சாரம் வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் காபூலில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது ஐஎஸ் அமைப்பினர் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2018-ல் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பத்திரிகையாளர்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர். இப்படிப் பல்வேறு தாக்குதல்கள் மூலம் தங்களது கொடூரத்தன்மையை ஐஎஸ் அமைப்பினர் நிரூபித்துவருகிறார்கள்.

ஐஎஸ் அமைப்பினர் தாலிபான்களைப் போலவே ஆப்கன் அரசை எதிர்த்துச் சண்டையிட்டுக்கொண்டிருந்தாலும், தாலிபான்களுடன் அதிக நெருக்கம் காட்டவில்லை. சொல்லப்போனால், தாலிபான்களை எதிரிகளாகவே ஐஎஸ் அமைப்பினர் கருதுகிறார்கள். தாலிபான் அமைப்பில் இருந்த அதிருப்தியாளர்களில் பலர் ஐஎஸ் அமைப்புக்குத் தாவிவிட்டனர்.

சன்னி பிரிவினர் ஆதிக்கம் செலுத்தும் ஐஎஸ் அமைப்பு, ஷியா பிரிவினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திவருகிறது. கூடவே, பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் இந்தத் தாக்குதல்களில் குறிவைக்கப்படுகிறார்கள்.

இஸ்லாம் அரசைக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ஐஎஸ் அமைப்பினர் அதற்காக மிகத் தீவிரமான வன்முறைச் செயல்களில் ஈடுபடத் தயங்காதவர்கள். தாலிபான்களின் வழிமுறையையையும் கேள்விக்குட்படுத்துபவர்கள். கத்தார் நாட்டில் அமெரிக்காவுடன் தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தியதைக் கடுமையாக விமர்சிப்பவர்கள். ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளுடனான தூதரக உறவில் தாலிபான்கள் இருப்பது குறித்தும் ஐஎஸ் கோராசான் அமைப்பினருக்கு அதிருப்தி உண்டு. மொத்தத்தில் ஆப்கனுக்கு உண்மையான ஆபத்து ஐஎஸ் கோராசான் அமைப்புதான் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் கூறியிருக்கின்றன.

அடுத்தது சிரியாவா?

2018-ல் சிரியாவிலிருந்து வெளியேறுவது என்று ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முடிவெடுத்தபோது, அமெரிக்கப் படைகளுடன் இணைந்து ஐஎஸ் அமைப்பினருக்கு எதிராக யுத்தம் செய்துவந்த குர்து இனப் போராளிகள் தனித்துவிடப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் 2 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் சிரியாவில் இருந்தனர். தற்போது நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்களே மிச்சம் இருக்கும் நிலையில், அவர்களையும் திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கலாம் எனும் ஊகங்கள் வெளியாகியிருக்கின்றன.

x