தேடிவந்து வேட்டையாடுவோம்


ஜோ பைடன்

‘ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம், தேடிவந்து வேட்டையாடி தகுந்த பதிலடி கொடுப்போம்’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

ஆப்கன் நாடு தாலிபான்கள் வசம் வந்ததையடுத்து முதல் சம்பவமாக, நேற்று 26-ம் தேதி மாலை தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையம் அருகே தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. விமானநிலையம் அருகிலும், அங்குள்ள ஹோட்டலில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. எதிர்பாராத இந்த குண்டுவெடிப்புகளால், அங்கு அடைக்கலமாகியிருந்த ஏராளமான மக்கள் பீதியில் உறைந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது என சொல்லப்பட்டாலும், பலி எண்ணிக்கை மேலும் இருக்கும் என்கிறார்கள்.


இந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க வீரர்கள் 12 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும், மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ அமைப்பு காரணம் என்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தங்கள் வீரர்கள் உட்பட பொதுமக்கள் பல பேரை பலிவாங்கிய காபூல் குண்டுவெடிப்பு குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ”காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்; அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

x