இலங்கையில் உச்சத்தில் கரோனா மூன்றாம் அலை


இலங்கையில் கரோனா பரிசோதனை

தமிழகத்தில் கரோனா 3-ம் அலை குறித்த அச்சம் குறைந்து, புதிய தளர்வுகளை அரசு அறிவித்து வரும் நிலையில், அண்டை நாடான இலங்கையில் கரோனா 3-ம் அலை உச்சத்தை எட்டியிருக்கிறது. இதுவரையில் இல்லாத அளவாக, அங்கே தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 23-ம் தேதி மட்டும் 4 ஆயிரத்து 353 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று அது 4,427 ஆக உயர்ந்தது. இதுவே நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகப்படியான தொற்று எண்ணிக்கை என்று அந்நாட்டு அரசு அறிவித்த நிலையில், அடுத்தநாளே அதையும் விஞ்சியிருக்கிறது தொற்று எண்ணிக்கை. இலங்கையின் முன்னாள் மத்திய அமைச்சரான மங்கள சமவீரா நேற்று காலை கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

டெல்டா எனும் உருமாறிய கரோனாவின் கோரதாண்டவம் காரணமாக, இலங்கையில் கடந்த 20-ம் தேதி நள்ளிரவு முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறியதாக, இதுவரையில் 57 ஆயிரத்து 435 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு போலீஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு தலைமை மருத்துவர் சமித்த கினிகே கூறும்போது, "இதுவரையில் நாட்டில் கரோனா தொற்றால் மரணமடைந்தவர்களில் 91 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்தான். ஒரு தவணை தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்களில் 8 சதவிகிதம் பேர் இறந்துள்ளனர். இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்களில் இறந்ததோர் எண்ணிக்கை வெறும் 1 சதவிகிதம்தான். எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

x