காசா: காசாவில் உள்ள பள்ளி வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பள்ளியில் ஹமாஸ் போராளிகள் தங்கி இருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனிடையே, காசா மீதான போர் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அந்தப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய காசாவின் நுசிராட்டில் உள்ள ஐக்கிய நாடுகளின் பள்ளி ஹமாஸ்களின் ரகசிய கட்டளைத் தளமாக செயல்பட்டு வந்தது. அந்த வளாகத்தில், கடந்த 2023, அக்.7-ம் தேதி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்குவதற்கு காரணமாக இருந்த ஹமாஸ் போராளிகள் பதுங்கி இருந்தனர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் போர்விமானங்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, பொதுமக்களின் உயிரிழப்பை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஹமாஸ் அரசு ஊடகத்தின் இயக்குனரான இஸ்மாயில் அல் தவாப்தா இஸ்ரேலின் கூற்றை நிராகரித்துள்ளார். அவர் கூறுகையில், "போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான குற்றத்தை நியாயப்படுத்தும் விதமாக பொதுமக்களிடம் பொய்யான கருத்துக்களை உருவாக்க இஸ்ரேல் இட்டுக்கட்டப்பட்ட கதைகளைக் கூறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையின் போது சண்டையினை நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் தெரிவித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்திற்கு குறைவான எதையும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், "விரிவான அளவில் ஆக்கிரமிப்பு அகற்றம், துருப்புகளை முழுமையாக திரும்பப்பெறுதல், கைதிகளை இடம் மாற்றுதல் அடிப்படையிலான ஒப்பந்தத்தை நேர்மையாகவும், தீவிரமாகவும் எங்கள் இயக்கம் கையாளும்" என்று தெரிவித்திருந்தார்.
காசாவில் நடந்துவரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் ஜே பைடனின் மூன்று கட்ட திட்டத்துக்கான எதிர்வினையாக ஹனியேவின் இந்தக் கருத்துப் பார்க்கப்படுகிறது. போர்நிறுத்தத்தை உறுதி செய்வது, ஹமாஸ்கள் அனைத்து பிணை கைதிகளை விடுவித்தால் காசாவில் இருந்து இஸ்ரேல் துருப்புகள் வெளியேறுவது உள்ளிட்டவை இந்தத் திட்டத்தில் அடங்கும்.
இதற்கிடையே, பாலஸ்தீனிய பிராந்தியத்தில் போருக்கு பிந்தைய ஒழுங்கு குறித்து ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மவுத் அப்பாஸின் ஃபதாக் கட்சிக்கிடையேயான பேச்சுவார்த்தை ஜூன் மாதம் மத்தியில் சீனாவில் நடைபெறும் என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு சுற்று நல்லிணக்கப் பேச்சுவார்த்தை சீனா மற்றும் ரஷ்யாவில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.