மெக்சிகோவின் முதல் பெண் அதிபராகிறார் கிளாடியா


கிளாடியா ஷீன்பாம்

மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் தேர்தலும் நாடாளுமன்ற இரு அவைகளுக்குமான தேர்தலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. சுமார் 10 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், முந்தைய தேர்தல்களைப் போல சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் ஆளும் மொரேனா கட்சி சார்பில் போட்டியிட்ட கிளாடியா ஷீன்பாம் 58.3 சதவீதம் முதல் 60.7 சதவீதம் வரையிலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மெக்சிகோவின் 200 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் பெண்ஒருவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை.

முன்னாள் மேயர்: 61 வயதான ஷீன்பாம் பருவ நிலை விஞ்ஞானியும் மெக்சிகோ நகர முன்னாள் மேயரும் ஆவார்.அவரது 6 ஆண்டு பதவிக் காலம் அக்டோபர் 1-ம் தேதி தொடங்குகிறது. தற்போதைய அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் வழியில் கிளாடியாவின் ஆட்சிக் காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கிளாடியா ஷீன்பாம் கூறும்போது, “மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நான் தனியாக இந்த வெற்றியை பெறவில்லை. நாம் அனைவரும் சேர்ந்து இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளோம். அமை தியான முறையில் தேர்தல் நடைபெறும் ஜனநாயக நாடாக நமது நாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளோம்.

எனது அரசியல் வழிகாட்டியான அதிபர் லோபஸ் ஒப்ரடாரைப் போலவே, பொருளாதார சமத்துவமின்மையை போக்குவதிலும், உறுதியான சமூக பாதுகாப்பை வழங்குவதிலும் எனது அரசுக்கு வலுவான பங்கு இருப்பதாக நம்புகிறேன்” என்றார்.

தன்னுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாக கிளாடியா கூறினார்.

நாடாளுமன்ற இரு அவைகளுக்குமான தேர்தலிலும் கிளாடியாவின் மொரேனா கட்சி பெரும்பான்மை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x