விண்ணைத் தொடுது விலைவாசி... கண்ணைக் கட்டுதே தினக்கூலி!


இலங்கையில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கான செலவுகள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. கடந்த வாரம் பெட்ரோல் விலை ரூ.8 உயர்ந்தது. இதனால் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் இலங்கை நாணய மதிப்பின்படி ரூபாய் 155 (இந்திய மதிப்பின்படி ரூ.68). அமெரிக்க டாலருக்கு இணையான இலங்கை நாணயத்தின் மதிப்பு ரூ,166 ஆகக் குறைந்தது (இந்திய மதிப்பு ரூ.72.06). இவற்றின் விளைவாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே போகிறது.

இதற்கிடையில் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தினக் கூலித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடிவருகிறார்கள்.
இலங்கையின் தேயிலைத் தோட்டத் தொழில் 19-ம்நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் தொடங்கப்பட்டது. இப்போது அது இலங்கை அரசுக்கு அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கியத் தொழிலாக விளங்குகிறது. இலங்கையில் தயாராகும் தேயிலைக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய மதிப்பு இருப்பதே இதற்குக் காரணம்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் தமிழர்களும் கணிசமாக இருக்கிறார்கள். இந்தப் படையில் பெண்களே அதிகம். இவர்கள் நாள் ஒன்றுக்கு இலங்கை ரூபாய் 500-ஐக்கூலியாகப் பெறுகிறார்கள் (இந்திய மதிப்பின்படி ரூ.216). இதுதவிர, உற்பத்தி மற்றும் வருகைப் பதிவேடு இலக்குகளை நிறைவேற்றினால் மேலும் 200 ரூபாய் கிடைக்கும். இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி விலை இலங்கை ரூபாய் 100 (இந்திய மதிப்பு ரூ.44). இதை வைத்தே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான  இடைவெளியைப்  புரிந்துகொள்ளலாம். இவர்கள்  தங்கள்கூலியை ஒரு நாளைக்கு இலங்கை ரூபாய் 1,000 (இந்திய மதிப்பின்படி ரூ.430) உயர்த்தச் சொல்லிக் கோருகிறார்கள்.

இந்தக் கூலி உயர்வுக் கோரிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் உள்ளது. தேயிலைத் தோட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர் அமைச்சராகவும் கோலோச்சும் அளவுக்கு இந்தத் தொழிற்சங்கங்கள் இலங்கையில் செல்வாக்கு நிரம்பியவையாக இருக்கின்றன. தொழிலாளர்கள் சார்பில் இவர்கள் தேயிலைத் தோட்ட முதலாளிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளில் சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை. சங்கங்கள் 50% கூலி உயர்வு கேட்க முதலாளிகளோ 15% க்கு மேல் ஏறிவரத் தயாராக இல்லை. இப்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால், இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வலுத்துவருகிறது.

x