இனியாவது இந்தோனேசியா விழித்துக்கொள்ளட்டும்!


பூமிப் பந்தில் இந்தோனேசியாவைச் சுற்றி அமைந்திருக்கும் டெக்டானிக் தட்டுக்கள் இடமாற்றம் அடைவதால் அந்த நாட்டில் நிலநடுக்கங்களும் சுனாமியும் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த செப்டம்பர் 28 மாலை ஆறு மணி அளவில் சுலாவேசி தீவுப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவான நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து தாக்கிய சுனாமியும் மிகக் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தின. குறிப்பாக, இந்தத் தீவின் தலைநகர் பாலு என்ற கடற்கரை நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1,350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது, சுமார் இரண்டு லட்சம் பேர் உணவு, உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகளை இழந்திருப்பதாகச் சொல்கிறது ஐநா.

உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் தவித்துவருகின்றனர். ஆழிப்பேரலைகளால் அடித்துச் செல்லப்பட்ட உறவுகள் உயிருடன் திரும்பிவிட மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் பல குடும்பங்கள் காத்திருக்கின்றன. காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

பாலங்கள் உடைந்து விழுந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசின் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்தடைவதிலும் சிக்கல்! போதுமான நிவாரணப் பொருட்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்தடையாமல் இருந்ததற்கு அந்நிய நாடுகளின் உதவியைப் பெற இந்தோனேசிய அரசு தயக்கம் காட்டியதும் ஒரு காரணம். பிறகு, அரசு அந்தத் தயக்கத்தைக் கைவிட்டதும் பல நாடுகளின் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பியதுடன் மீட்புப் பணிகளுக்கு தன்னார்வலர்களையும் தந்திருக்கின்றன.

இந்தோனேசியாவில் வெப்பம் அதிகம் என்பதால் உயிரிழந்தவர்களின் பிணங்கள் விரைவாக அழுகி அவற்றிலிருந்து பரவும் கிருமிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் பிணக் குவியல்களை ஒரே குழியில் போட்டுப் புதைத்து வருகிறார்கள். பலரது சடலங்கள் இயற்கை சீற்றத்தால் உருவான மணல் முகடுகளில் புதைந்துள்ளன. அவற்றைத் தேடி எடுத்து அப்புறப்படுத்துவதும் பெரும் சவாலான பணியாக உருவெடுத்துள்ளது.

x