மறுமலர்ச்சியை நோக்கி மாலத்தீவு


மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதிபர் அப்துல்லா யாமீனின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. செப்டம்பர் 30-ல் வாக்கு எண்ணும் பணி நிறைவடையும் என்றாலும் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலிஹ், யாமீனைவிட 38,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அவர் நவம்பர் 17 அன்று புதிய அதிபராகப் பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாறி மாறி முடியாட்சியில் இருந்துவந்த மாலத்தீவில் 2008-ல் தான் குடியாட்சி மலர்ந்தது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக அங்கே மீண்டும் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர முயன்றார் அதிபர் யாமீன். 2013-ல் நடந்த தேர்தலில் வென்றுதான் யாமீன் மாலத்தீவு அதிபரானார். அந்தத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கலகக் குரல் எழுப்பின. இதை ஒடுக்க, ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் எதிர்கட்சித் தலைவர்களைக் கைது செய்தார் யாமீன். அவர்களை விடுவிக்க முயன்ற நீதிபதிகளையும் கைது செய்தார். அவசர நிலையையும் பிரகடனம் செய்து அதை நீட்டித்துக்கொண்டே இருந்தார்.

தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் யாமீன் கட்டுப்படுத்திவந்த நிலையில் அங்கே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கச் சாத்தியமில்லை என்று பலரும் கருதினர். தவிர முன்னாள் அதிபர்கள் மாமூன் அப்துல் கயூம், முகமது நஷீத் இருவரும் சிறையில் இருந்ததால், யாமீனுக்கு எதிரான வலுவான போட்டியாளரும் களத்தில் இல்லை என்றும் கருதப்பட்டது.

ஆனால், மாலத்தீவு மக்கள் தாங்கள் சர்வாதிகாரத்துக்கு எதிரானவர்கள் என்று ஜனநாயக வழிமுறையில் நிரூபித்துள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக அதிக அளவாக 89% வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். தொலைக்காட்சியில் தோன்றி தனது தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட யாமீன், ஆட்சி மாற்றம் அமைதியாக நிகழும் என்று உறுதியளித்திருக்கிறார்.

x