சுவீடன் குடிமக்களும் அகதிகளை வெறுக்கிறார்களா?


அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் மத்தியில் அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிரான மனநிலை வலுத்துக்கொண்டே வருகிறது. மனித உரிமை சார்ந்த விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் நாடுகளில் ஒன்றான சுவீடனிலும் இந்த மனநிலை பரவிவருகிறது என்பதே அந்நாட்டில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் செய்தி.

செப்டம்பர் 10 அன்று வெளியான தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி 28% வாக்குகளைப் பெற்று தனிப் பெரும் கட்சி என்ற இடத்தைப் பெற்றிருந்தாலும் பெரும்பான்மையைப் பெறவில்லை. அதன் வாக்கு விகிதமும் சரிந்திருக்கிறது. 19.8% வாக்குகளுடன் மைய- வலதுசாரி மிதவாதக் கட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த காலத்தில் வெள்ளையர்களே உயர்வானவர்கள் என்ற கோட்பாட்டையும் ஹிட்லரின் நாஜிக் கொள்கையின் அடிப்படைகளையும் பின்பற்றி வந்த தீவிர வலதுசாரிக் கட்சியான சுவீடன் ஜனநாயகக் கட்சி 17.6% வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. அகதிகளாலும் புலம்பெயர்ந்தவர்களாலும் சுவீடன் குடிமக்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற பிரச்சாரத்தின் மூலமே இந்தத் தேர்தலை எதிர்கொண்டது இக்கட்சி. அதன் வாக்கு விகிதம் கடந்த தேர்தலைவிட 4.7% அதிகரித்திருக்கிறது.

1970-களில் இருந்தே சுவீடன் அரசு, அகதிகள் குடியேற்றத்தை அனுமதித்துவருகிறது. ஆப்கானிஸ்தான், சிலே, ஈரான். ஈராக், சோமாலியா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் சுவீடனில் தற்போது கண்ணியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

x