மனிதம் தழைக்க மனமிறங்குமா மியான்மர்?


மியான்மரில் (பர்மா) கடந்த 2016 முதல் 2017 வரை ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் மிக மோசமான, மனிதாபிமானமற்ற, மனித உரிமை மீறல் என்று ஐநா மனித உரிமைகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை ‘இனப்படுகொலை’ என்றும் அறிவித்துள்ளது ஐநா!

மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் வசித்த ரோஹிங்யா முஸ்லிம்களை அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் பெளத்தர்கள் நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கினர். இதன் விளைவு இருபிரிவினருக்குமிடையே அடிக்கடி வன்முறை தலைதூக்கியது. ரோஹிங்யா தரப்பினர் ஆயுதம் ஏந்திப் போராடவும் ஆரம்பித்தனர். இதைச் சாக்காக வைத்து மியான்மர் ராணுவம் அவர்களை கொன்றொழிக்கும் வேலையில் இறங்கியது. குழந்தைகள் உட்பட பல ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். பெண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஏழு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரிலிருந்து வெளியேறி, சுற்றியுள்ள நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். இப்படி தஞ்சமடைந்தவர்களில் 40 சதவீதத்தினர் 18 வயதுக்கும் உட்பட்டவர்கள். குடியேற்றம், உலகின் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் அகதிகளாகத் தஞ்சமடைபவர்களின் நிலையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதில் முரண் என்னவென்றால், அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சியின் கட்சியினுடைய ஆட்சிதான் மியான்மரில் நடக்கிறது. இந்தப் படுகொலையை அவர் கண்டும் காணாமல் இருந்து ‘அமைதி’ காத்தார் என்பதும் கசப்பான உண்மை. 1990-லேயே ஆட்சியில் அமர வேண்டிய ஆங் சான் சூகிக்கு ஆட்சி கிடைக்காததற்குக் காரணம் ராணுவச் சட்டம். இன்று அதே ராணுவத்துக்கு அடிபணிந்து அமைதி காத்துக்கொண்டிருக்கிறார் ஆங் சான் சூச்சி.

x