இந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான்?


பாகிஸ்தானின் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் நேரடியாக இந்தியாவோடு தொடர்புடையவை. எனவேதான் பாகிஸ்தான் தேர்தலை இந்தியா உன்னிப்பாகக் கவனித்துவந்தது. பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, சிறு கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் கடந்த வாரம் ஆட்சி அமைத்தார். பிரதமராகவும் பதவியேற்றுக்கொண்டார். “ஜின்னாவும் இக்பாலும் கனவு கண்ட ஊழலும், வறுமையும் இல்லாத புதிய பாகிஸ்தானை உருவாக்குவேன்” என்று கூறித்தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறார் இம்ரான் கான். ஆனால், அவருக்கு எதிரே சவால்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

இந்தியாவுடனும், சீனாவுடனும் நல்லுறவை வேண்டுவதாகக் கூறியிருந்த இம்ரானுக்கு இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். பதவியேற்பு விழாவுக்கு இந்திய பிரதமர், சீன அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை.

தீவிர மதப்பற்றாளரான இம்ரான் கான், “பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த முயல்வது தான் மோடி அரசின் கொள்கையாக இருக்கிறது” என்று தேர்தலுக்கு முன்பு கூறியதையும் இங்கே நினைவுகூர வேண்டியிருக்கிறது. கூடவே, சீக்கியர்கள் கோரும் ‘காலிஸ்தான்’ என்ற தனிநாடு விவகாரத்திலும் ஆதரவாகப் பேசிவந்திருக்கிறார் இம்ரான். பயங்கரவாத அமைப்புகளுடன் அவர் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வா, “இம்ரான் கானைப் போல ஜனநாயகத்துக்கு ஆதரவானவரை இதுவரைப் பார்த்ததில்லை” என்று தேர்தலுக்கு முன்பே கூறினார். இது, இம்ரானுக்குப் பின்னால் ராணுவம் இருப்பதை வெளிப்படையாகவே காட்டியது. இதெல்லாம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தானுடைய பொருளாதாரமும் இப்போது மிகவும் நலிவடைந்து கிடக்கிறது.

இப்படி பல்வேறு சவால்களுக்கிடையில்தான் பாகிஸ்தான் பிரதமராகியிருக்கிறார் இம்ரான். இத்தனை சவால்களையும் முரண்பாடுகளையும் கடந்து இவர் அண்டை நாடுகளுடன் குறிப்பாக இந்தியாவுடன் நட்பு பாராட்டுவாரா என்ற பெருங்கேள்வி பதிலுக்காகக் காத்திருக்கிறது!

x