பாகிஸ்தான் தேர்தலில் இம்ரானின் சாதனை!


பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில், தான் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் வென்று பாகிஸ்தான் அரசியலில் புதிய சாதனை படைத்துள்ளார் இம்ரான் கான்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் ஜூலை 25-ல் நடந்தது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் அஹ்மத் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இவைதான் போட்டியில் முன்னணியில் இருந்தன.
பாகிஸ்தானில் இப்போதும் ஓட்டுச்சீட்டு முறைதான் தொடர்கிறது. வாக்களிப்பு நடந்து முடிந்ததும் வாக்குகள் உடனுக்குடன் எண்ண ஆரம்பித்து அடுத்த 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதே பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் வழக்கம். இந்தத் தேர்தலின்போது குண்டுவெடிப்பு, சில இடங்களில் வன்முறைக் கலவரங்கள் நடந்ததாலும் தேர்தலில் ராணுவத்தின் ஆதிக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளாலும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், இந்தத் தேர்தலில் தீவிரவாத அமைப்புகளும் போட்டியிட்டதால், தேர்தல் ஆணையமும் பெருத்த விமர்சனங்களைச் சந்தித்தது.

பாகிஸ்தான் அரசியலைத் தீர்மானிக்கும் அதிகாரம் அதன் ராணுவத்திடமே உள்ளது. உலகிலேயே ஆறாவது பெரிய ராணுவம் பாகிஸ்தானுடையது. முஸ்லிம் நாடுகளில் முதல் பெரிய ராணுவம். இங்கு ராணுவம் யாரை விரும்புகிறதோ அவர்தான் பிரதமராக வரமுடியும். அப்படிப்பட்ட எதேச்சதிகார அரசியல்தான் அங்கு இப்
போதும் உள்ளது. 2013-ல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டாலும் ராணுவத்தின் ஆதரவுடன் நவாஸ் ஷெரீப்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவுசெய்திருந்தாலும் ராணுவத்தைப் பகைத்துக் கொண்டதால் ராணுவம் அவருக்கு எதிராகத் திரும்பியது. நவாஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் அவரது கட்சியை அவரது சகோதரர் ஹம்சா ஷபாஸ் ஷெரீப் வழிநடத்தினார்.

நவாஸ் ஷெரீப்பின் இந்தப் பின்னடைவு இம்ரான் கானுக்குச் சாதகமாக மாறியது. போதாதுக்கு இந்தத் தேர்தலில் ராணுவம் இம்ரான் கானுக்கு முழு ஆதரவு அளித்தது. இம்ரான் 1996 லிருந்து 22 ஆண்டுகளாக அரசியலில் இருந்தாலும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. 2013-ல் தான் அவரது கட்சி பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இந்தத் தேர்தலில் ராணுவத்தோடு, மக்களின் ஆதரவும் இம்ரானுக்கு இருந்தது. இதன் மூலம் பிடிஐ கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக இம்ரான் கான், தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

x