தாய்லாந்திடம் பாடம் படித்துக்கொள்ள வேண்டும்


தாய்லாந்து மலைக்குகையில் சிக்கிக்கொண்ட 13 பேரும் 17 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் ஒரு கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும், பூமிக்கு அடியில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் 10 கிலோமீட்டர் நீளமுள்ள தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ல் சாகசப் பயணம் மேற்கொண்டனர். அப்போது பெய்த கனமழை வெள்ளம் காரணமாக அவர்கள் அனைவரும் குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

அன்று இரவே தாய்லாந்து கடற்படையினர் மீட்புப் பணியைத் தொடங்கினர். 17 நாட்கள் தொடர்ந்து நடந்த மீட்புப் போராட்டம் இறுதியில் வெற்றியடைந்தது. பல்வேறு தடங்கல் கள், சவால்களை மீறி வெற்றியடைந்த இந்த மீட்புப் பணி பல்வேறு படிப்பினையையும் நமக்குத் தருகிறது. தண்ணீரும் சேரும் சகதியுமாக இருந்த குகையிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகள் தொடங்கின. பிரிட்டன் உள்பட பல நாடுகளின் குகை மீட்புக் குழு நிபுணர்கள் இந்தப் பணியில் இணைந்தனர்.

குகையில் சிறுவர்கள் பத்திரமாக இருப்பது தெரிந்தவுடன் அந்த வீடியோவை வெளியிட்டு பெற்றோர்களின் பதற்றத்தைக் குறைத்தனர். சிக்கிக்கொண்டவர்களுக்குத் தேவையான உணவு, மருந்துகளைக் கொடுத்தனர். ஆக்சிஜன் சிலிண்டர்களை உள்ளே எடுத்துச் சென்று, உள்ளே இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டனர்.

x