உள்நாட்டுப் போரால் சீரழியும் சிரியா


கடந்த இரண்டு வாரங்களில் சிரியாவின் தென்மேற்கு மாகாணங்களில் அரசு நடத்திய தாக்குதல்களால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

சிரியாவில் பஷார் அல் அஸாத் தலைமையிலான அரசுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் 2011-லிருந்து போர் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் அப்பாவி மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தலைநகர் டமாஸ்கஸின் கிழக்கு கட்டா பகுதியில் ரஷ்யாவின் துணையுடன் சிரியா அரசு வான்வழித் தாக்குல் நடத்தியது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்.

தற்போது சிரியாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள டெரா மற்றும் க்வினிட்ரா ஆகிய பகுதிகளிலும் அரசு தாக்குதல் நடத்திவருகிறது. முன்னதாகக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அமெரிக்கா மற்றும் ஜோர்டான் நாடுகளின் முயற்சியால் இப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் இவ்விரு பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக சற்று அமைதி நிலவியது. ஆனால், கிழக்கு கட்டாவைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அரசு, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இவ்விரு மாகாணங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் முடிவுசெய்தது. அதற்காகவே புதிய தாக்குதல்களைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதல்களில் இதுவரையிலும் 130-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் கூறியுள்ளது. கடந்த வார இறுதியில் பல நகரங்களும், கிராமங்களும் அரச படையிடம் சரணடைந்து பஷார் அல் அஸாத் ஆட்சியை ஏற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தாக்குதல்களால் இந்தப் பகுதிகளில் வசிக்கும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அதாவது 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் வெளியேறிவிட்டதாக ஜோர்டானில் உள்ள ஐ.நா அகதிகள் முகமையின் செய்தித் தொடர்பாளர் முகமது ஹவாரி கூறியுள்ளார்.

x