உலகமே எதிர்பார்த்த அமெரிக்க – வட கொரிய அதிபர்கள் சந்திப்பு நடக்குமா என்பதில் குழப்ப நிலை நீடிக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான வார்த்தைப் போர் உலகை அச்சுறுத்திவந்தது. “என்னிடம் அணு ஆயுத பட்டன் ஒன்று இருக்கிறது. அழுத்தினால் மொத்த உலகமும் காலியாகிவிடும்” என்று கிம்மும், “என்னிடம் அதைவிடப் பெரிய பட்டன் மேஜையின் மீதே இருக்கிறது” என்று ட்ரம்பும் பேசிவந்தனர். இந்த அணு ஆயுத சச்சரவை முன்வைத்தே மூன்றாம் உலகப் போர் மூண்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தன இதர நாடுகள்.
இந்த நிலையில், அண்மையில் திடீரென்று இருவருக்கும் இடையில் இணக்கம் ஏற்படும் சூழல் உருவானது. ட்ரம்ப்பைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், வடகொரியாவின் அனைத்து அணு ஆயுதக்கூடங்களையும் மூடுவதாகவும் அறிவித்தார் கிம். கிம்முடனான சந்திப்பைத் தானும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகச் சொன்னார் ட்ரம்ப்.
சில வாரங்களுக்கு முன்புவரை, “உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணமாக எங்களுடைய சந்திப்பை மாற்ற நாங்கள் முயற்சி செய்வோம்” என்று கூறிவந்த ட்ரம்ப் திடீரென்று இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.