பரவட்டும் இந்த நல்லிணக்கம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கிருஷ்ணர் கோயில் ஒன்றைப் புதுப்பிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கியுள்ளது மாகாண அரசு. ராவல்பிண்டி-இஸ்லாமாபாத் இரட்டை நரங்களில் உள்ள ஒரே இந்துக் கோயில் இதுதான். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 1897-ல், கட்டப்பட்ட இந்தக் கோயில் பிரிவினைக்குப் பின் 1949-ல், புலம்பெயர்ந்தோர் சொத்துகளைப் பராமரிப்போர் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் வகையில் இந்தக் கோயில் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதற்காகக் கட்டிடக் கலை வல்லுநர்கள் இந்தக் கோயிலை ஆய்வு செய்துவருகின்றனர். இந்துக் கோயிலுக்கு இஸ்லாமிய நாட்டின் மாகாண அரசு நிதியளிக்கும் இந்த நல்லிணக்கம் உலகெங்கும் பரவட்டும்.
அரசியல் பேசிய குழந்தைகள்
புத்தரின் பிறந்தநாளை ஒட்டி ஆண்டு தோறும் ஹாங்காங்கில் பெரும் கொண்டாட்டங்கள் நடைபெறும். மக்கள் பெருந்திரளாக வீதிகளில் கூடி குழந்தைகளை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். இந்தக் கொண்டாட்டங்கள் அண்மைய ஆண்டுகளில் அரசியல்மயமாகி வருகின்றன. இந்த வருட ஊர்வலத்தில் குழந்தைகள் அரசியல் தலைவர்கள் போலவும், பண்டைய கடவுளர்கள் போலவும், முக்கியமான அரசியல், சினிமா பிரபலங்கள் போலவும் வேஷமிட்டு வந்தனர். தங்களுடைய வேஷத்துக்கேற்ப அவர்கள் அரசியல் விவகாரங்களையும், சமூக அவலங்களையும் பற்றிப் பேசினர். குழந்தைகளுக்கு அரசியல் புரிதலை ஏற்படுத்த இதுபோன்ற கொண்டாட்டங்கள் பயன்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது.