இஸ்ரேல் - பாலஸ்தீனம் எல்லைப் பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் எட்டு மாதக் குழந்தை உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெருசலேமை சொந்தம் கொண்டாடுவதில் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக பங்காளிச் சண்டை நீடிக்கிறது. கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் பாலஸ்தீனத்தில் வாழும் முஸ்லிம்கள் என மூன்று பிரிவினர் சொந்தம் கொண்டாடும் பகுதியாக ஜெருசலேம் இருப்பதால், இபிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார். கையோடு, இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேத்துக்கு மாற்ற உத்தரவிட்டார். இதனால் பாலஸ்தீனத்தில் கடும் அதிருப்தி உருவாகியிருக்கிறது. இதுவே இப்போது அங்கு நடக்கும் வன்முறைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் வித்திட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
1948-ல், இஸ்ரேலில் இருந்து ஏழு லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதை ஒவ்வொரு ஆண்டும் நக்பா தினமாக பாலஸ்தீன மக்கள் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டு நக்பா தினமானது 70-வது ஆண்டை நிறைவு செய்கிறது. அன்றைய தினம், எல்லைப் பகுதியான காசாவில் ஒன்றுகூடிய பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். டயர்களைக் கொளுத்துவது, கற்களை வீசுவது என போராட்டம் வன்முறையாக மாறியது. இதைக் கட்டுப்படுத்த இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில்தான் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 2,700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பாலஸ்தீனம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
பாலஸ்தீனியர்கள் ஆயுதங்கள் எதுவும் ஏந்தாத நிலையில் இஸ்ரேல் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹு, இந்தப் படுகொலைகளைக்கு இதுவரை வருத்தம் தெரிவித்ததாகத் தெரியவில்லை. வன்முறை நடந்த ஒரு சில நாட்களில் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகத்தின் திறப்புவிழா நடந்திருக்கிறது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த அணுகுமுறையானது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகியிருக்கிறது ஆக, அதிகாரங்களுக்கு இடையில் அகப்பட்டுக்கொண்டு பாதிக்கப்படுவது எப்போதும்போல் அப்பாவி மக்கள்தான்!