‘டமாஸ்கஸ் டைம்’ என்ற இரானிய படத்தைப் பிரபலப்படுத்த, அதன் நடிகர்கள் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் வேடத்தில் பிரபல ஷாப்பிங் மாலில் நுழைந்தனர். இவர்கள் நிஜமான தீவிரவாதிகள் என்று பயந்து மக்கள் கத்திக் கூச்சலிடத் தொடங்கினர். சிலர் இந்த விளையாட்டைப் புரிந்துகொண்டு அவர்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இருந்தபோதிலும் படத்தை ஓடவைப்பதற்காக நடிகர்கள் இப்படி நடந்துகொண்டது சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்களைக் கிளப்பியது. ‘டமாஸ்கஸ் டைம்’, சிரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரானிய விமானி மற்றும் அவரது மகனைப் பற்றிய படம்.
பாலின உரிமையை நிலைநாட்டும் சட்டம்
மூன்றாம் பாலினத்தவரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஒருவர், தான் விரும்பும் பாலினத்தை அரசு ஆவணங்களில் பதிவு செய்வதன் மூலம், தனது பாலின அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் உரிமையை வழங்குகிறது இந்தச் சட்டம். திருநங்கைகள், திருநம்பிகளுக்கு வேலைவாய்ப்பிலும் கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட சேவை வழங்கும் துறைகளிலும் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது என்கிறது இச்சட்டம். ஆபத்து இருப்பதாக உணரக்கூடிய மூன்றாம் பாலினத்தவரைத் தங்க வைக்க அரசு சார்பில் பாதுகாப்பு மையங்களை உருவாக்கவும் சட்டம் வழிவகுக்கிறது. பாகிஸ்தானில் 5 லட்சம் மூன்றாம் பாலினத்தவர் வசிப்பதாகச் செயற்பாட்டாளர்கள் சொல்கிறார்கள். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதை வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தருணம் என்று வர்ணிக்கிறார்கள் அவர்கள்.
பிளாஸ்டிக்கைச் சாப்பிடலாம்!