2003-ல், அரசியலுக்கு முழுக்குப் போட்ட மஹதிர் பின் முகமது, தற்போது மீண்டும் மலேசியப் பிரதமர்.
‘கபாலி’ படத்தில் மலேசிய தாதா ரஜினிகாந்த் திரும்பிவந்து எதிரிகளைப் பந்தாடுவார். அதேபோல் 15 ஆண்டுகள் கழித்து அரசியலுக்குத் திரும்பிய மஹதிர் பின் முகமது, தற்போது மலேசியப் பிரதமராகியிருக்கிறார். உலகின் மிக மூத்த பிரதமர் என்ற சிறப்பையும் அடைந்திருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில், பாரிஸன் நேஷனல் கூட்டணியின் 60 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. 2008-ல் இருந்து மலேசிய பிரதமராக இருந்த நஜீப் ரஜாக் பதவியிழந்தார்.
மஹதிருக்கு பிரதமர் பதவி புதிதல்ல. பாரிஸன் கூட்டணியில் இருந்துகொண்டு 22 ஆண்டுகள் மலேசியப் பிரதமராக இருந்தவர் அவர், அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் மலேசியா, தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரும் பொருளாதாரச் சக்தியாக உயர்ந்தது. மேலும் ‘மலேசிய நவீனமயத்தின் தந்தை’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார். அதேநேரம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டங்களைப் பயன்படுத்தித் தனது விமர்சகர்களைக் கடும் தண்டனைக்கு ஆளாக்கிய சர்வாதிகார முகமும் இவருக்கு உண்டு.