குவைத்தில் 2.6 லட்சத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் மக்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் வீட்டு வேலை செய்பவர்கள் 60%. சில மாதங்களுக்கு முன், குவைத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்துத் தன் நாட்டவர் குவைத்தில் வேலை செய்யத் தற்காலிகத் தடை விதித்தது பிலிப்பைன்ஸ் அரசு.
இப்போது அந்தத் தடை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பணியாளர்களைத் தாய்நாட்டுக்குத் தப்பிக்க உதவியதாக, பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகள் சிலரை நாட்டை விட்டு வெளியேற்றியது குவைத் அரசு. இதுதான் நிரந்தரத் தடைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. நாடு திரும்புவோருக்குத் தாய்மண்ணிலும் சீனாவிலும் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்திருக்கிறார் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட்.
ராயல்டி கேட்கும் முன்னாள் நண்பன்
கடந்த ஆண்டு, ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பைக் கிளப்பின. இப்போது வெய்ன்ஸ்டீன் நிறுவனத்தின் மீது ராயல்டி குற்றச்சாட்டுகளும் பதிவாகி வருகின்றன. புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான குவென்டின் டொரண்டினோ, வெய்ன்ஸ்டீன் நிறுவனம் தனக்கு 4 மில்லியன் டாலர் ராயல்டி பாக்கி வைத்திருக்கிறது என்று வழக்குத் தொடர்ந்துள்ளார். டொரண்டினோ, வெய்ன்ஸ்டீனின் நீண்டகால நண்பரும்கூட. பாலியல் குற்றச்சாட்டுக்குப் பின் வெய்ன்ஸ்டீனுடனான தனது தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் டொரண்டினோ. தற்போது வெய்ன்ஸ்டீன் நிறுவனம் சொத்துகளை விற்று, பாலியல் புகார் கொடுத்தவர்களுக்கு நஷ்ட ஈடு தர இருக்கிறது. அதற்கு முன் தனது பாக்கியைத் திருப்பித் தர வேண்டும் என்கிறார் டொரண்டினோ.